இறந்த பின்பும் ஒரு வழிகாட்டியாகவே இருக்கிறார் பாசு. அவர் இறந்தபின்பு, கடையடைப்போ, மறியல்களோ, அசம்பாவிதங்களோ ஏற்படவில்லை. மக்கள் காசைக்கொட்டி சமாதியும் உருவாக்கவில்லை. அவர் தன் உடலை தானமாகக் கொடுத்திருக்கும் விவரமே, அவர் இறந்த பின்புதான் தெரிந்தது.
Thursday, January 21, 2010
செவ்வஞ்சலி..
இறந்த பின்பும் ஒரு வழிகாட்டியாகவே இருக்கிறார் பாசு. அவர் இறந்தபின்பு, கடையடைப்போ, மறியல்களோ, அசம்பாவிதங்களோ ஏற்படவில்லை. மக்கள் காசைக்கொட்டி சமாதியும் உருவாக்கவில்லை. அவர் தன் உடலை தானமாகக் கொடுத்திருக்கும் விவரமே, அவர் இறந்த பின்புதான் தெரிந்தது.
Monday, January 18, 2010
ஹரிவராசனம் - வழக்கமும் வரலாறும்!
இந்த ஆண்டு எழுதும் முதல் பதிவு என்பதால் இறைவன் குறித்து எழுதுகிறேன். சென்ற மாதம் சபரிமலை சென்று சாஸ்தாவை தரிசித்து வந்தேன்.
சபரிமலை யாத்திரை என்னை எனக்கே அடையாளம் காட்டியது. ஹிந்து மதம் ஆறு விதமான வழிபாடுகளை கொண்டுள்ளது. காணாபத்தியம், கௌமாரம், சாக்தம், சைவம், வைஷ்ணவம், சௌரம் என்ற ஆறு வழிபாடுகளையும் தாண்டி எழாவது மதம் ஆக இருக்கிறது சாஸ்தா வழிபாடு. எண்ணிலடங்கா ஐயப்பன்மார்கள் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு வந்து ஐயனைத் தரிசிக்கின்றனர்.
அய்யன் சந்நிதானத்தில் சரணகோஷம் விண்ணைப் பிளக்கிறது. பெருவழிப்பாதை என்னும் காட்டுப் பாதையில் பக்தர்கள் வரும்போது, கொடிய மிருகங்கள் ஏதும் தொந்தரவு செய்வதில்லை. கானகமே அதிரும்படியாக சரணம் சொல்லியபடியே பகலிரவு பாராமல் பக்தர் கூட்டம் சன்னதி நோக்கி வந்துகொண்டிருக்கிறது. கடந்து வந்த பாதையின் இடர்கள் அனைத்தும் பதினெட்டு படிகளைக் கண்டவுடன் மறைந்து விடுகிறது.
மாலை நான்கு மணிக்கு நடை திறக்கும் போது சென்று, இரவு பதினோரு மணிக்கு நடை சார்த்தும் வரையில் சந்நிதானத்தில் இருந்தோம். நடை சார்த்தும் போது ஹரிவராசனம், பத்மஸ்ரீ யேசுதாஸ் அவர்களின் குரலில் ஒலிக்கிறது. பரவசத்தில் ஆழ்த்துகிற ஒரு பாடலாக இருக்கிறது ஹரிவராசனம். அந்தப் பாடல் குறித்து மேலும் பல விவரங்களை இப் பதிவில் சொல்ல விழைகிறேன்.
ஹரிவராசனம் கும்பக்குடி குளத்தூர் ஐயர் என்பவரால் 1950 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. மொத்தம் பதினாறு பதங்களைக் கொண்ட இப்பாடலில், முதல் ஏழு பதங்கள் மட்டுமே சபரிமலையில் பாடப்படுகின்றது. சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டு, மத்யமாவதி ராகத்தில் பாடப்படுகிற இப்பாடல் குறித்து இரு வேறு வரலாறுகள் கேள்விப்பட்டேன். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு மேல் சாந்தி திருமேனி ஈஸ்வரன் நம்பூதிரியின் நண்பர் கோபால மேனன் என்பவர்தான் இப்பாடலை ஆத்மார்த்தமாக பாடுவார். கோபால மேனன் அங்கேயே தங்கி இருந்தார். தேவசம் போர்டு உருவானபிறகு அவர் சந்நிதானத்தில் இருந்து அனுப்பப்பட்டார்.
பிறகு ஒருநாள் கவனிப்பார் இன்றி வண்டிப்பெரியாரில் உள்ள ஒரு தனியார் இடத்தில அனாதையாக இறந்து போனார். அவரது மறைவைக் கேள்விப்பட்ட அன்று மேல் சாந்தி சன்னதியை நடை சார்த்தும் போது அவரது நினைவாக இந்தப் பாடலைப் பாட ஆரம்பித்தார். அது என்றும் தொடர்கிறது என்று சிலர் கூறுகின்றனர்.
இன்னொரு சரார்களின் கூற்றின்படி, இப் பாடலைப் பாடும் வழக்கம், சந்நிதானத்தைப் புதிதாகப் பிரதிஷ்டை செய்த போது ஏற்பட்டது. 1955 - நடந்த ஒரு பெரும் தீ விபத்தில் சன்னிதானம் முற்றிலும் சேதமடைந்ததை தொடர்ந்து, சுவாமி விமோச்சனானந்தா தென்னகம் எங்கும் சுற்றுப்பயணம் செய்து ஐயப்ப பக்தியைத் தழைக்கச் செய்தார். அவர் மூலமாகவே இப்பாடல் சுவாமிக்கு இரவு நேரத் தாலாட்டாக பாடப்படுகிறது. ஒவ்வொரு பதம் பாடி முடியும் போதும் ஒவ்வொரு கீழ் சாந்தியும் ஒன்றன் பின் ஒன்றாக சன்னதியை விட்டு வெளியில் வருவர். பாடல் முடிவடைந்தபின், மேல் சாந்தி, ஸ்ரீகோவிலில் உள்ள தீபங்களை ஒவொன்றாக சாந்தி செய்து விட்டு வெளிவந்து நடை சார்த்துவார்.
சைவ வைஷ்ணவ பேதம் இன்றி பாடப்படும் இப்பாடல், கேட்பார் நெஞ்சை கரைக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
Monday, November 30, 2009
காய்ச்சலும் கவலையும்...
இந்த மழை சிலருக்கு கவிதைகளையும் சிலருக்கு காய்ச்சலையும், எனக்கு இரண்டையும் தந்திருக்கிறது. உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே இருந்தேன். மருந்துகள், தூக்கம், சோர்வு என்று நேரம் கடந்து கொண்டிருந்தது. என் தந்தை பயன்படுத்திய சாய்வு நாற்காலியில் பெரும்பாலும் படுத்துக்கிடந்தேன். நோய் கண்டவனின் பகல் பொழுதுகள் சஹாராவை விட நீளமாக இருக்கின்றன. காய்ச்சல் காரணமாக சிறுவயதில் ராணி காமிக்ஸ் புத்தகத்தில் படித்த கதை மாந்தர்களெல்லாம் இரவில் கனவில் வந்து இம்சை செய்தனர். இரவும் அல்லா பகலும் அல்லா ஒரு ஹிரண்யநேரத்தில் மருத்துவமனைக்கு சென்று வந்ததைப் பற்றி யோசித்தவண்ணம் இருந்தேன்.
பள்ளி நாட்களில் இருந்து இன்று வரை பலமுறை மருத்துவமனைக்கு சென்றிருக்கிறேன்.ஒவ்வொரு முறையும் அது தனித்த அனுபவமாகவே இருக்கிறது. சிறுவயதில் இருந்து பார்த்த அதே டாக்டர் சிரித்த முகத்துடன் அமர்ந்திருந்தார். காத்திருந்த நேரத்தில் சுற்றி இருந்த அனைவரையும் உற்று நோக்கியவண்ணமிருந்தேன். அற்புதமான முக வாசிப்புகள் ரயில் நிலையங்களிலும் மருத்துவமனைகளிலும் தான் சாத்தியமாகின்றது. மருத்துவமனைகள் வயது வித்தியாசமின்றி எல்லோரையும் குழந்தைகள் போல் மாற்றிவிடுகின்றன. எல்லோருக்கும் உடல் நிலை சரியில்லாத போது சாய்ந்துகொள்ள ஒரு தோளும், ஆறுதலுக்கு ஒரு சொல்லும் தேவைப்படுகின்றது. எல்லா மருத்துவமனைகளிலும் இருக்கும் குழந்தை படம், அமைதியாயிருக்கும் படி சொன்னது.
சிறு வயதில் சேற்றில் கிரிக்கெட் விளையாடி, கை கால்கள் எல்லாம் புண்கள் வந்து அவஸ்தைப்பட்டேன். இப்பொது இருக்கும் டாக்டர், அவரது தந்தை (அவரும் டாக்டர்) , மற்றும் என் தந்தை எல்லோரும் சேர்ந்து மயக்கமருந்து இன்றி எனக்கு ஒரு அறுவை சிகிச்சைக்கு நிகரான ஒரு நிவாரணம் செய்து அலறவைத்தனர். சிறுவயதில் அந்த அறைக்குள் செல்ல மறுத்து அடம் பிடித்தது நினைவுக்கு வந்து, என்னை நானே மவுனமாக பகடி செய்து கொண்டிருந்தேன்.
அப்போது ஒரு சிறுவனை அங்கே அவன் தந்தை அழைத்து வந்தார். அவன் ஊசி போட வேண்டாம் என்று எதற்கோ பலமாக அழத்துவங்கினான். அவன் தந்தை அவனை சமாதானப்படுத்தி விட்டு புதிய ஊசி வாங்க மருந்தகம் சென்றார். அவன் மெல்ல என் அருகில் வந்து ஊசி வேண்டாம் என்று சொல்லுங்கள் அண்ணா என்றான். சரி என்று ஆமோதித்தேன். உடனே என் கையை இறுக்கிப் பிடித்தபடி, அவன் உட்கார்ந்து கொண்டான். நடுங்கிக்கொண்டிருக்கும் அவன் கைகளின் வெம்மை என் கைகளுக்குள் பரவ ஆரம்பித்தது. எனக்கும் அவனுக்கும் வயது குறைந்துகொண்டிருந்தது. பேச்சற்ற மௌனத்தில் இருவரும் அமர்ந்திருந்தோம். சொற்கள் ஏதும் அற்ற ஒரு தவிப்பை அவன் உணர்ந்திருந்தான். அவன் தந்தை வந்து மறுபடியும் அழைக்கலானார். அவன் ஊசி வேண்டாம்பா என்று மறுபடியும் அழ ஆரம்பித்தான். வயது வேறுபாடின்றி, மருத்துவமனைகள் எல்லோரையும் எதோ பயம் கொள்ளச் செய்கின்றன. ஏன் அங்கே காத்திருப்பது ஒரு சுவாரசியமான அனுபவமாக எவருக்கும் இருப்பதில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். என் தவிப்பு எனக்கே விசித்திரமாகவும் நகைப்புக்குரியதாயும் இருந்தது. நான் எதையோ நினைத்து சிரிக்க ஆரம்பித்தேன். அருகில் இருந்த ஒருவன் எனக்கு காய்ச்சல் முற்றிவிட்டிருக்குமோ என்று பயந்து சற்று தள்ளி உட்கார்ந்தான். நான் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தேன்.
Friday, November 20, 2009
ஜிமெயில் ஜாக்கிரதை!
நாளுக்கு நாள் நம் ஜிமெயில் பயன்பாடு அதிகரித்துவருவது குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். 2004 -லில் துவங்கப்பட்ட இச்சேவை, ஆரம்பத்தில் அழைப்புகள் (invitations) மூலமாகவே, பயனர்களை (users) சேர்த்துக்கொண்டு வந்தது. 2007 -இல் இருந்து திருவாளர் பொதுஜனம் பயன்படுத்தக் கூடிய வகையில் மாறியது. தொழில் நுட்பப் பூங்காவின் முன்னாள் இயக்குனர் மறைந்த ரா. ந. பாலசுப்ரமணியன் அவர்கள் கொடுத்த அழைப்பு மூலமே, நான் ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தத் துவங்கினேன். 2007 -இல் இருந்து தான் ஜிமெயில் தன் பீட்டா (beta என்பதற்கு சரியான தமிழ்ப் பதம் என்ன? அறிஞர் பெருமக்கள் எனக்கு உதவலாமே!) அந்தஸ்தில் இருந்து, முழுமை பெற்ற வெளியீடு (release) ஆக மாறியது. 1 GB ஆகத் துவங்கி, தற்போது 10 GB முதல் 400 GB வரை பணம் செலுத்திப் பெறலாம். நீங்கள் இப்பதிவைப் வாசித்துக்கொண்டிருக்கும் போது ஜிமெயில் பயனர்களின் எண்ணிக்கை 150 மில்லியன் ஆக இருக்கக்கூடும். ஜெர்மனி மற்றும் பிரிட்டனில் ஜிமெயில் கூகிள் மெயில் என்று சொல்லப்படுகிறது. ஏதோ உரிமம் (copyright) குறித்த சர்ச்சை என்று கேள்விப்பட்டேன்.
நிற்க, என் பதிவு, ஜிமெயில் - குறித்து இன்று ஒரு தகவல் - தென்கச்சி சுவாமிநாதன் போல சொல்லிக்கொண்டு போவதல்ல. என் நண்பன் ஒருவன் தன் ஜிமெயில் முகவரி யாரோ இணையத் திருடர்களால் களவாடப்பட்டது என்று சொன்னான். எவ்வளவு முயன்றும் புதிய கடவுச்சொல்லைக் கண்டு பிடிக்க இயலவில்லை என்றும் மாற்று முகவரியும் (secondary email) களவாடப்பட்டது என்றும் சொன்னான். வெகு விரைவில் பலரும் இதுபோல் சொல்லுவார்கள் என்று என்னால் கணிக்க முடிகிறது (Ragavan 's instinct). பெரிய மெனக்கெடல் எதுவும் இல்லாது, சுலபமாய் கண்டுபிடிக்க பல வழிகள் உள்ளன. "கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?" என்கிற கேள்விக்கு விடை கண்டறிய முயற்சி செய்தால், பலவும் சாத்தியமே. "செல்லப் பெயர், படித்த பள்ளி, கைபேசியின் முதல் ஐந்து இலக்கங்கள், செல்ல நாயின் பெயர்" என்பது போன்ற கேள்விகளுக்கு சரியான பதில்களை orkut மற்றும் myspace போன்ற சமூக வலைதளங்களில் (social networks) நாம் தெளிவாக உளறி வைத்திருக்கும்போது, அவற்றைக் கொண்டு கடவுச்சொல்லை எளிதாக அனுமானம் செய்ய முடியும். தகவல் பாதுகாப்பு எங்கோ தடுமாறுகிறது!