கொல்கத்தா
நகரத்தில் ப்ளேக் நோய் தன் கோரதாண்டவத்தை ஆடிக்கொண்டிருந்த காலத்தில், ராமகிருஷ்ண மடம் சார்பாக சுவாமி
விவேகானந்தர் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தொண்டற்றிவந்தார்.
அப்போது ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியாமல் சீடர்கள் என்ன செய்வது
என்று விவேகானந்த சுவாமிகளிடம் சென்று ஆலோசனை கேட்டனர். அதற்கு விவேகானந்தர் 'மடத்தையும் அதன் சொத்துக்களையும்
விற்க வேண்டி வந்தாலும் பரவாயில்லை, எப்படியாவது நிதி திரட்டி வேண்டிய மருந்துப்
பொருட்களை வாங்குவோம், இந்த நோயை விரட்டி அடிப்போம், துயர் தீர்ந்த பின் மறுபடியும்
மக்களிடம் கை ஏந்திச் சென்று நிதி பெற்று மடத்தைக் கட்டிக் கொள்வோம்' என்று
ஆலோசனை வழங்கினார். மடத்தை விற்றேனும் மக்கள் துயர் துடைக்க எழுந்த மகான் எங்கே,
மடத்தைக் காக்க நீதிமன்றப் படியேறிப் போராடிக்கொண்டிருக்கும் பதர்கள் எங்கே? இன்று அவரது நூற்றைம்பதாவது
பிறந்தநாள். சுவாமி விவேகானந்தர் என்கிற பெயரைச் சொன்னாலே
கம்பீரம், தைரியம், பொறுமை, வீரம் எல்லாம் பீறிட்டு எழும். என்றைக்கும் குன்றாத இளமை வேண்டும் என்று அபிராமி பட்டர் அபிராமி
அந்தாதியில் சொன்னது சுவாமி விவேகானந்தருக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. அவருக்கு
மட்டுமே அது பொருந்தும். எத்தனயோ மகான்கள் இந்த ஞான பூமியிலே, அவர்களில்
ஒருவராம் சுவாமி விவேகானந்தருக்கு இந்த எளியவனின் நமஸ்காரங்கள்.
Showing posts with label General. Show all posts
Showing posts with label General. Show all posts
Saturday, January 12, 2013
Tuesday, January 8, 2013
கார்த்திக் ராஜா
விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் வெகு நாட்களுக்குப் பிறகு கார்த்திக் ராஜாவைப் பார்க்க நேர்ந்தது. யுவன் ஷங்கர் ராஜா பாடல்களைக் கேட்டு வளர்ந்த ஜெனரேஷன் ஆசாமிகள் பலருக்கு கார்த்திக் ராஜாவைத் தெரியவில்லை. இவர் ம்யுசிக் எல்லாம் கம்போஸ் பண்ணுவாரா என்று கேட்டு என்னை கதி கலங்க வைத்தார்கள். கார்த்திக் ராஜாவின் இசையில் 'அலெக்சாண்டர்' திரைப்படம் வெளிவந்தபோது (1996) அந்தப் படத்தின் 'நதியோரம்' பாடல் மக்களால் வெகுவாக வரவேற்கப்பட்டது. மாரியம்மன் கோவில் திருவிழா மைக்செட், கல்யாண வீடுகள், பிரைவேட் பஸ்கள் எல்லாம் அந்தப் பாடலைப் பலமுறை ஒலிபரப்பி, ஒலிபரப்பி அந்தப் பாடல் பிரபலம் ஆகியது. இப்போது யார் இவரு என்று கார்த்திக் ராஜாவைக் கேட்பவர்களைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். வெகு நாட்களுக்குப் பிறகு அலெக்ஸாண்டர் படமும் நதியோரம் பாடலும் நினைவுக்கு வந்தது. அப்போதெல்லாம் கார்த்திக் ராஜாவுக்கு பெரிய மவுசு இருந்தது. பின்னர் அவருக்கு ஏன் பெரிய வெற்றிகள் இல்லை என்பது எனக்கு இன்னமும் புரிய வில்லை. வெகு நாட்களுக்குப் பிறகு இன்றைக்கு அந்தப் பாடலை Youtube-ல் கேட்டு இன்புற்றேன். உன்னி கிருஷ்ணன் மற்றும் பவதாரிணி பாடிய பாடல். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். Link for the Song
Wednesday, October 3, 2012
தமிழ்ப் பாட்டுதான் வேண்டும்
முதன்முதலாகத் தமிழ்நாட்டில் பணம் கொடுத்துப் பாட்டுக் கேட்டவர் சிவபெருமான். அதுவும் தமிழ்ப் பாட்டுதான் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
பரந்தபாரிடம் ஊரி டைப்பலி
பற்றிப் பாத்துணுஞ் சுற்ற மாயினீர்
தெரிந்த நான்மறையோர்க் கிட மாய திருமிழலை
இருந்து நீர்தமி ழோடி சைகேட்கும்
இச்சை யாற்காசு நித்தல் நல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே
பொழிப்புரை:
மிக்க பூத கணங்களை, ஊர்களில் பிச்சையேற்று அதனைப் பகுத்து உண்ணும் சுற்றமாக உடையவரே, ஆராய்ந்த நான்கு வேதங்களை உணர்ந்தோராகிய அந்தணர்க்கு இடமான திருமிழலை யுள், அரிய, குளிர்ந்த வீழி மரத்தின் நிழலை இடமாகக்கொண்டவரே, நீர், இனிதிருந்து இசையைத் தமிழோடு கேட்கும் விருப்பத்தால், அத்தகைய தமிழைப் பாடியோர்க்குப் பொற்காசினை நாள்தோறும் வழங்கினீர் ; அதுபோல, அடியேனுக்கும் அருள் செய்யீர்.
-சுந்தரமூர்த்தி நாயனார், திருவீழிமிழலைப் பதிகம் எட்டாவது பாசுரம்
Tuesday, October 2, 2012
கல்கியின் கவிதைகள்
சங்கீத மேடைகள் அக்காலத்தில் தமிழை பகிஷ்கரித்து தெலுங்கை வளர்த்துவந்தன. இந்நிலையை மாற்ற ஸ்ரீமான் கல்கி கிருஷ்ணமூர்த்தி கங்கணம் கட்டிக்கொண்டு எடுத்த முயற்சிகளில் ஒன்றுதான் தமிழிசை இயக்கம். இவ்வியக்கம் பல தமிழ் ஆர்வலர்களால் போஷிக்கப்பட்டு வந்தது.தெலுங்குக் கீர்த்தனைகள்தான் உயர்ந்தவை என்று இவ்வியக்கத்திற்கு எதிராகத் சிலர் செய்துவந்த விதண்டாவாதங்கள் கல்கியின் எழுத்துக்களால் தவிடுபொடி ஆகிப்போயின. பேருக்குத் துக்கடாவாகப் தமிழ் பாடிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் முழுமையாக வரிகளின் பொருள் உணர்ந்து பாடவும், கேட்பவர்கள் சங்கீதம் (இசை) மட்டுமின்றி, சாகித்தியத்தையும் (பாடலின் பொருள்) புரிந்து கொண்டு இன்புறவேண்டும் என்பதே கல்கி அவர்களின் அவா.
தமிழில் நல்ல கீர்த்தனங்கள் இல்லை பலர் நொண்டிச் சாக்கு சொல்லிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் ஸ்ரீமான் கல்கி தமிழின் சிறந்த பாடலாசிரியர்களான ஸ்ரீ அருணாச்சலக் கவிராயர், ஸ்ரீ முத்துத் தாண்டவர், ஸ்ரீ பாபநாசம் சிவன், மகாகவி சுப்ரமணிய பாரதியார், ஸ்ரீ சமயாசாரியான் ஆகியோரின் பாடல்களைப் பற்றி எடுத்துரைத்து அவற்றை மேடையில் பாடுமாறும் பரிந்துரைத்தார். தவிர அவரே சில தமிழ்க் கவிகளை இயற்றினார். சில பாடகர்களின் பிடிவாதத்தினால் நமக்கு கல்கியின் நல்ல கவிகள் கிடைத்தன. அவற்றை நீங்கள் அன்பன் ஓஜஸ் எழுதியுள்ள பதிவில் பார்க்கலாம்.
அதன் உறலி: http://naarchanthi.wordpress.com/2012/09/09/kalki/
Subscribe to:
Posts (Atom)