Saturday, September 26, 2009

ஸ்ரீரங்கம் நாட்கள்

வெகு நாட்களுக்குப் பிறகு ஸ்ரீரங்கம் தெருக்களில் சுற்றி அலைந்து கொண்டிருந்தேன். சித்திரை, உத்திர, அடையவளஞ்சான் வீதிகளுக்கும் எனக்கும் நடுவே ஒரு மாயவலை பின்னப்பட்டிருக்கிறது. நான் பார்த்த, அவதானித்த ஸ்ரீரங்கம் நிறைய மாறி இருக்கிறது. நவராத்திரி நாட்களின் உற்சாகமும் குதூகலமும் குறைந்திருக்கிறது. எப்போதும் போல் தாயார் சன்னதிக்கும், மேட்டு அழகிய சிங்கர் சன்னதிக்கும் சென்று வந்தேன். மெல்லிய வோட்கா வாசனையுடன் பட்டர் தக்ஷிணை கேட்டு நச்சரித்தார். தற்போது அமெரிக்காவிலிருக்கும் என் நண்பன் வரதனுடன் கல்லூரி நாட்களில் ஓவ்வொரு சன்னதியாக பார்த்துவிட்டு ஆயிரம் கால் மண்டபத்தின் எதிர்புறம் உள்ள மணல் வெளியில் மடைப்பள்ளி பிரசாத்துடன் நிலவொளியில் பேசிக்கொண்டு இருந்தது நினைவுக்கு வந்து ஞாபகக் கிளர்ச்சியை உண்டு பண்ணியது. நிலா இன்றும் தன் கிரணங்களை வருவோர் போவோர் மீது வீசிக் கொண்டிருக்கிறது. எதாவது ஒரு தெருவில் நின்று, ஸ்ரீனிவாசா, வரதராஜா, ரங்கராஜா என்று குரல் கொடுத்தால், நேற்று பிறந்த குழந்தையில் இருந்து, நாளை சாகப்போகிற கிழம் வரை ஏகப்பட்டவர்கள் வந்து, ஏனப்பா அழைத்தாய் என்று பிலுபிலுவென்று பிடித்துக் கொள்வார்கள்.

இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஊர் என்பதால் தேவதைகளுக்கு பஞ்சமே இருக்காது. பெரும்பாலும் சீதாலக்ஷ்மி ராமசுவாமி அல்லது காவேரி கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிற நேரம் போக மற்ற நேரங்களில் கண்ணில் படும் வாலிப வயோதிகர்களை அழகால் வதைக்கிறவர்கள். உயரம், தோற்றம், நிறம் , குணம், அங்க லாவண்யம் எதிலும் பழுது சொல்ல முடியாதபடி, தான் அழகாக இருக்கிறோம் என்கிற அகங்காரமோ, பிரக்ஞயோ இல்லாதிருப்பர்கள். நவராத்திரியின் மாலை வேளைகளில் பட்டுப் பாவாடையுடன் அக்கம் பக்க வீடுகளுக்குப் போய் ஸ்வரம் போட்டு சோபில்லு அல்லது கிருஷ்ணா நீ பேஅகனே பாடி விட்டு சுண்டல் சேகரிப்பர். எதாவது ஒரு தெரு முக்கு வீட்டின் திண்ணையில் உக்காந்து சுண்டலை ஸ்வாகா பண்ணி விட்டு அரட்டை அடிக்கும் காட்சிகளை இப்போதெல்லாம் காண முடிவதில்லை.