Tuesday, April 27, 2010

வாழ்க வளமுடன்!

சமீபத்தில் ஒரு மூதாட்டி தனது உடல் நிலை சீரானபடி இல்லாததால், சிகிச்சைக்காக தமிழகம் வந்திருக்கிறார். எவ்வகையிலும் சமூகத்தின் அமைதிக்கு அவர் குந்தகம் விளைவிக்கப் போவதில்லை என்று உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்தும், அவரை விமானத்திலேயே நிறுத்தி, தமிழகத்திற்குள் வர அனுமதி மறுக்கப்பட்டிருகிறது. பாதுகாப்பு காரணங்கள் காட்டி, வந்த முதியோரை விரட்டி அடித்திருக்கிறது, சங்கத்தமிழ் பேசும் கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ்க்குடி(?! டாஸ்மாக் நினைவுக்கு வந்தால், நான் பொறுப்பல்ல).

தமிழனைப் பொறுத்தவரையில் "அன்பிலர் எல்லாம் தமக்குரியர். அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. யாதும் ஊரே, யாவரும் கேளிர்" போன்ற கலாச்சாரப் பேச்சுக்கள் பட்டிமண்டபங்களுக்கும், அரசியல் மேடைகளுக்கும், கல்வெட்டுகளுக்கு மட்டுமே, நிஜ வாழ்கைக்கு இல்லை என்று பறைசாற்றுகிறதாக இருக்கிறது இந்நிகழ்வு. தமிழனின் நிஜ முகம் - பயமும், மறதியும். அஞ்சி அஞ்சிச் சாவார், இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே என்ற பாரதியின் கூற்று மறுபடியும் நிருபணமாகி இருக்கிறது. சிறந்த மருத்துவர்கள், தரம் நிறைந்த மருத்துவமனைகள், ஆசியாவிலேயே சிறந்த மருத்துவ மையங்கள் நிறைந்த நகரம் சென்னை என்று சொல்லிகொள்வதில் ஒரு பெருமையும் இல்லை. சிகிச்சை அவசியமாய் இருப்பவர்களை, மருத்துவம் காக்கும் என நம்பி வருவோரை திருப்பி அனுப்பும் குணம் வாய்ந்தோர் உள்ள செந்தமிழ்நாடு ஒருபுறம் என்றால், விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல் மகள், IPL போட்டிகளுக்காக ஒரு விமானத்தை வழி மாற்றி இருக்கிறார். ரொம்ப முக்கியம்!

வாழ்க தமிழ் நாடு. ஓங்குக தமிழன் புகழ்!

Sunday, April 25, 2010

தமிழன் என்றொரு இனமுண்டு....


சினிமாவுக்கு அடுத்தபடியாக வெகுஜனங்களை ஈர்த்த ஐபீஎல்(IPL) என்கிற அதி உன்னதமான நிகழ்வு தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கும் இந்த விளையாட்டு மோகத்தில் தன்னிலை மறந்தோர் பலர். புரளும் பணம், பலரது கவனத்திற்கும் உள்ளானதால், அரசு தற்போது அப்பணத்தை தன்வசப்படுத்த முடியுமா என்று யோசிக்கின்றது. அரசு இயந்திரம் ஏற்கனவே பல காமெடிகள் செய்திருக்கிறது. அதன் IPL அத்யாயம் ஏற்படுத்தும் புதிய காமெடிகள் என்னவென்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். IPL ஸ்கோர் தெரியாதவன் ஆதிவாசிகளில் ஒருவன் என்கிற நிலையில் வேற்றுமைப்படுத்தப்பட்டு, இரவெல்லாம் கண்விழித்து மேட்ச் பார்த்து, பகலெல்லாம் அது குறித்து விவாதிக்கும் அதி புத்திசாலிகள் அதிகரித்துவிட்டனர். குடிநீர் பிரச்சினை, விஷம்போல உயரும் விலை வாசி, புவி வெப்பமயமாதல், GSLV தோல்வி என்பதெல்லாம் தாண்டி, IPL மட்டுமே பேச்சில் மையம்கொண்டிருக்கிறது.

எப்போதும் போல் சராசரித் தமிழன், தேர்தல் நேரத்தில் மட்டும், அரசின் செயல்முறைகள் குறித்து யோசித்து விட்டு, யார் அதிகப் பணம் தருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்து விடுகிறான். அவன் வாழ்வை நெறிப்படுத்தவும், அவன் சிந்தனைகளை மேம்பட்டதாகவும் மாற்றியமைக்க சினிமா மற்றும் IPL என்று இரு முக்கிய வாழ்வியல் முறைகள் (?!) உள்ளன என்று சொன்னால் அது மிகை ஆகாது. வாராவாரம் ஆனந்தவிகடன் பல்வேறு பிரபலங்களைப் பற்றி துணுக்குகளாக செய்திகள் தருகிறது. கமல், ரஜினி, சச்சின், அழகிரி, டோனி போன்றவர்களின் வரிசையில் அவ்வப்போது சில பிரபலமாகதவர்களும் வருவதுண்டு, மக்களின் நீடுதுயில் நீக்க மூத்திரச்சட்டியோடு தள்ளாதவயதிலும் பேசி அலைந்த பகுத்தறிவுப் பகலவன் பெரியார், வாழ்வே தவமென வாழ்ந்த காமராசர், உழைப்பவன் வாழ்வு மேம்பட ஊரெல்லாம் மறைந்து அலைந்து தன்வாழ்வு பாராத தோழர் ஜீவா எல்லாம் மேற்குறிப்பிட்ட உத்தமர்களுக்குப் பின்னரே. அட்டைப்படத்தில் பாவனாவும், ஒரு ஓரத்தில் ஜீவாவும் பார்க்க நேர்ந்தது இவ்வாரம். ஜீவா படம் அட்டையில் இருந்தால், ஜனசக்தி நாளிதழ் என்று நம் அருமைத் தமிழன் வாங்காமல் சென்று விடுவான். விகடனைச் சொல்லி குற்றமில்லை.

Thursday, April 8, 2010

வெயில் புராணம்

கோடையின் தீவிரம் தெரியத் துவங்கிவிட்டது இப்போதே. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கோடை இம்முறை மூர்கமாக இருப்பதாக உணர்கிறேன். யார்மீதோ கோபம் கொண்டனைப் போல் வெயில் ஆவேசமாக இயங்குகிறது. மரங்கள் கூட அசைவற்றுஇருக்கின்றன. தெருவெங்கும் ஆக்டோபஸ் போல வெம்மை தன் பல்வேறு கைகளால் மனிதர்களை கசக்கிப் பிழிகிறது. வெம்மை ஒவ்வொரு முறையும் நீருக்கான யுத்தத்தை துவங்கி விடுகிறது. அடுத்த உலக யுத்தம் நீருக்காகவே இருக்கும் என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன்.


வெயில் சன்னதம் கொண்டவனைப் போல் ஆக்ரோஷமாக ஆடுகிறது. அதன்ஒங்காரவேட்டையை நம்மால் உணரமுடிகிறது. யாராலும் தடுக்க முடியாத ஒரு போர் வீரனைப் போல் அது எல்லோரையும் முதுகில் அறைகிறது. வியர்வை கசகசக்கும் ஆடைகள் மனிதர்களை சொற்கள் அற்ற முரடர்கள் ஆக மாற்றி விடுகின்றன. அவனது அன்பான சொற்களை அவனிடமிருந்து பறித்து கொண்டுவிடுகிறது. கசக்கி எறியப்பட்ட காகிதம் போல வெம்மை நம்மை அலைக்கழிக்கிறது.


மனிதர்களின் சொற்களில் வெம்மையின் கொடூரம் களிம்பேறி இருக்கிறது. அரசமரத்தடி விநாயகர் நீர்கண்டு பல நாள் ஆன குகை மனிதனைப் போல தோற்றமளிக்கிறார். கோடையில் குருவிகள் நீர் அருந்துவதற்கு ஏதுவாக கல்லில் கிண்ணம் அடித்து நீர்ரூற்றி வைக்கிற வழக்கம் முற்றிலுமாக வழக்கொழிந்து விட்டதென்றே நினைகிறேன். மந்திக் குரங்குகள் மதிய நேரத்தில் குட்டிக் குரங்குகள் சகிதம் தொட்டி நீரில் அமிழ்ந்து ஆனந்தமாகக் குதியாட்டம் போடுகின்றன. சுதத்திரமான ஒரு ஜீவன் இன்று நீருக்காக மனிதனிடம் கையேந்திஇருக்கிறது.

அடிக்கிற வெயிலுக்கு நாமும் எதாவது குளம் குட்டையில் விழுந்துவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். தென்கரை வாய்கால் ஒன்று ஊரில் ஓடிக்கொண்டிருக்கிறது.அதில் எருமை மாடுகள் நன்கு நீரில் மூழ்கி, கரையோரம் இருக்கிற காந்தழ் பூக்களைத் தின்று கொண்டிருக்கும். வெயில் காலங்களில்,ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகேஇருக்கிற வாய்க்காலில் விளையாடி முடித்து விட்டு குளிக்க வேண்டும் என்கிற ஆசை பலமுறை வந்திருக்கிறது.அதன் ஆழமும் சுழற்சியும் அதிகம் என்பதால் அப்பா அதில் குளிக்க விடமாட்டார். பலமுறை கேட்டும் அனுமதி கிடைத்ததில்லை. அவரது பத்தாம் நாள்காரியத்தின் போது தான் குளிக்க நேர்ந்தது. ஒரு வரட்டுப் புன்னகையுடன் முங்கி எழுந்துவிட்டு வந்தேன். இப்போதெல்லாம் துஷ்டி வீடுகளுக்குப் போய் வருகையில் மட்டுமே குளிக்க நேருகிறது வாய்க்காலில்.

நாய்கள் கூட மர நிழலில் அசைவற்றுப் படுத்துக்கிடக்கின்றன. தெருவெங்கும் மழை நீரைப் போலே வெயில் வழிந்து ஓடுகிறது. கையில் ஒட்டிக்கொண்ட அழுக்கு போல வெயில் நம்மைப் பிரிய மறுக்கிறது. ஆனாலும் நான் கோடையைக் கண்டு மிரளுவதில்லை.வெம்மை என் வாழ்வோடு இணைந்திருக்கிறது.