Thursday, April 8, 2010

வெயில் புராணம்

கோடையின் தீவிரம் தெரியத் துவங்கிவிட்டது இப்போதே. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கோடை இம்முறை மூர்கமாக இருப்பதாக உணர்கிறேன். யார்மீதோ கோபம் கொண்டனைப் போல் வெயில் ஆவேசமாக இயங்குகிறது. மரங்கள் கூட அசைவற்றுஇருக்கின்றன. தெருவெங்கும் ஆக்டோபஸ் போல வெம்மை தன் பல்வேறு கைகளால் மனிதர்களை கசக்கிப் பிழிகிறது. வெம்மை ஒவ்வொரு முறையும் நீருக்கான யுத்தத்தை துவங்கி விடுகிறது. அடுத்த உலக யுத்தம் நீருக்காகவே இருக்கும் என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன்.


வெயில் சன்னதம் கொண்டவனைப் போல் ஆக்ரோஷமாக ஆடுகிறது. அதன்ஒங்காரவேட்டையை நம்மால் உணரமுடிகிறது. யாராலும் தடுக்க முடியாத ஒரு போர் வீரனைப் போல் அது எல்லோரையும் முதுகில் அறைகிறது. வியர்வை கசகசக்கும் ஆடைகள் மனிதர்களை சொற்கள் அற்ற முரடர்கள் ஆக மாற்றி விடுகின்றன. அவனது அன்பான சொற்களை அவனிடமிருந்து பறித்து கொண்டுவிடுகிறது. கசக்கி எறியப்பட்ட காகிதம் போல வெம்மை நம்மை அலைக்கழிக்கிறது.


மனிதர்களின் சொற்களில் வெம்மையின் கொடூரம் களிம்பேறி இருக்கிறது. அரசமரத்தடி விநாயகர் நீர்கண்டு பல நாள் ஆன குகை மனிதனைப் போல தோற்றமளிக்கிறார். கோடையில் குருவிகள் நீர் அருந்துவதற்கு ஏதுவாக கல்லில் கிண்ணம் அடித்து நீர்ரூற்றி வைக்கிற வழக்கம் முற்றிலுமாக வழக்கொழிந்து விட்டதென்றே நினைகிறேன். மந்திக் குரங்குகள் மதிய நேரத்தில் குட்டிக் குரங்குகள் சகிதம் தொட்டி நீரில் அமிழ்ந்து ஆனந்தமாகக் குதியாட்டம் போடுகின்றன. சுதத்திரமான ஒரு ஜீவன் இன்று நீருக்காக மனிதனிடம் கையேந்திஇருக்கிறது.

அடிக்கிற வெயிலுக்கு நாமும் எதாவது குளம் குட்டையில் விழுந்துவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். தென்கரை வாய்கால் ஒன்று ஊரில் ஓடிக்கொண்டிருக்கிறது.அதில் எருமை மாடுகள் நன்கு நீரில் மூழ்கி, கரையோரம் இருக்கிற காந்தழ் பூக்களைத் தின்று கொண்டிருக்கும். வெயில் காலங்களில்,ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகேஇருக்கிற வாய்க்காலில் விளையாடி முடித்து விட்டு குளிக்க வேண்டும் என்கிற ஆசை பலமுறை வந்திருக்கிறது.அதன் ஆழமும் சுழற்சியும் அதிகம் என்பதால் அப்பா அதில் குளிக்க விடமாட்டார். பலமுறை கேட்டும் அனுமதி கிடைத்ததில்லை. அவரது பத்தாம் நாள்காரியத்தின் போது தான் குளிக்க நேர்ந்தது. ஒரு வரட்டுப் புன்னகையுடன் முங்கி எழுந்துவிட்டு வந்தேன். இப்போதெல்லாம் துஷ்டி வீடுகளுக்குப் போய் வருகையில் மட்டுமே குளிக்க நேருகிறது வாய்க்காலில்.

நாய்கள் கூட மர நிழலில் அசைவற்றுப் படுத்துக்கிடக்கின்றன. தெருவெங்கும் மழை நீரைப் போலே வெயில் வழிந்து ஓடுகிறது. கையில் ஒட்டிக்கொண்ட அழுக்கு போல வெயில் நம்மைப் பிரிய மறுக்கிறது. ஆனாலும் நான் கோடையைக் கண்டு மிரளுவதில்லை.வெம்மை என் வாழ்வோடு இணைந்திருக்கிறது.

6 comments:

ஜான் said...

ஒசோனை கிழித்துக்கொண்டு, சூரியனை நேரே சந்திக்க கிளம்பிய நம் வெட்டி வீரத்தின் விளைவாக உயர்ந்த இந்த வெப்பம் என் கருத்த மேனியை இன்னும் கொஞ்சம் கருப்பாக்க பார்க்கிறது.
ஏய் வெயிலே! நான் இதற்கு மேல் கருப்பாக தயாராக இல்லை, நீ என்னை விட்டு தள்ளியே இரு. நான் உனக்கு தீண்டத்தகாதவனாக இருப்பதில் எனக்கு வருத்தமில்லை.

Davi said...

வயது ஏற ஏற வெயிலும் சற்று அதிகமாகவே தெரியும் என்று நினைக்கிறன் நண்பா!!

Thiruneelakandan said...

Most of the time we concern about providing remedies for the problems, and forget about prevention or precautions. Atlest from now we should concerned about our mother nature and stop polluting her. so that the climate be normal .

Recently there were two word in news copenhagen submit failure and increse in global temperature.

what hurting me is that developed and developing countries makes it as political issues between rich and poor.

எண்குணத்தான் said...

1 லிட்டர் குடிநீர் 18 ரூபாய்க்கு விற்கும் பேருந்து நிலைய கடைகள் ( இதர குடிபானங்களை பற்றி சொல்லவே வேண்டாம்! ),

நிறுத்ததிருக்கு நிறுத்தம் உப்பு நீரை அருந்தி பயணிக்கும் மூன்றாம் வகுப்பு ரயில் பயணிகளின் நிலை,

மண்டைய பிளக்கும் வெயிலில், நெருப்பை உமிழும் தார்ச்சாலையில் ஐஸ் விற்கும் தொழிலாளி,

உடைக்கும் உடலுக்கும் இடையேயான இந்த வியர்வை போராட்டம்,

நாவறட்சி, தலை பாரம், எரிச்சல், அப்ப அப்பா கொடுமை..

இதையெல்லாம் விட பெரிய கொடுமை,

கரும்பொருள் கதிர்வீச்சை அறியாமல் கருப்பு அங்கியை அணிந்து நடமாடும் என் முகமதிய சகோதரிகள்!


உதவாது இனி ஒரு தாமதம் உடனே நடுங்கள் மரக்கன்றுகளை, உலக வெப்ப மயமாக்கலுக்கு எதிராக போர்க்கொடி

தூக்குங்கள்! பெட்ரோலிய கால்களை கொண்டு நடப்பதை குறையுங்கள்! நீரின் மதிப்பை உணர்ந்து செலவிடுங்கள்!

எண்குணத்தான் said...

வெம்மையை கண்டு மிரளாத மனிதர் நீர் என்பதில் எனக்கு மிகுந்த சந்தோசம்..

பெற்றோர்களை எதிர்த்து காதல்மணம் புரியும் இந்த நவீன இளைஞ்சர்களுக்கு மத்தியில் நீரோடையில் குளிக்க கூட

அப்பாவிடம் அனுமதி கேட்டு நிற்கும் நீங்கள் பாரட்ட பட வேண்டியவரே !

ஆனால் பிள்ளையார் குளிப்பாட்டவில்லை என்று ஏன் கவலை படுகிறீர்கள்? குழந்தைகளுக்கு நீர்ப்பாலை கொடுக்கும்

ஊர்களில் கூட இன்று தவறாமல் தெய்வங்கலாக்கபட்ட கற்களுக்கு தேனாலும், பாலாலும், சந்தனத்தாலும், பஞ்ச

அமிர்தங்களாலும் அபிசேகம் செய்யப்படுகிறதே!

வெயிலின் சீற்றங்களை வர்ணித்த போலே அதனால் மக்கள் படும் அவதிகளை பற்றியும், தீர்வுகளை பற்றியும் அதிகமாக

சொல்லியிருக்கலாம் ....

kamalakkannan said...

கதிரவன் காலன் ஆகி கொண்டு இருக்கிறான்,கயவர்களின் அடுத்த தேர்தல் அறிவுப்பு " ஒரு ரூபாய்க்கு 10 லிட்டர் குடிநீர்"