Tuesday, August 3, 2010

குறும்படங்கள்

நிறைய எழுத வேண்டும் என்று எண்ணுகிற போதிலும் வெகு குறைவாகவே எழுத முடிகிறது. நண்பர் ஷாலோம் விஜய் இடுகைகள் குறைந்து விட்டனவே என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். பெரும்பாலும் தமிழ்இடுகைகள் நிறைய எழுதவே விரும்புகிறேன். தொழில்நுட்பம் குறித்த தகவல்கள் தவிர வேறு எதையும் ஆங்கிலத்தில் எழுதுவதில்லை. கலைச்சொற்கள் தெரியாமல் தடுமாறுவதே அதற்கு மூல காரணம். Blog என்பதற்கு மனஉரை என்கிற புதிய சொல்லை செம்மொழி மாநாட்டு அதிகாரபூர்வ இணையதளத்தில் கண்டேன். மனம் உரைப்பதை எல்லாம் உளறுவதால் மனஉரை என்று பெயரிட்டார்களா என்று தெரியவில்லை. காரணம் எதாகிலும் சொல் நன்றாக இருக்கிறது.

புதிய இடுகைகளாக நான் பார்த்து ரசித்த குறும்படங்கள் குறித்து பகிரலாம் என்று விரும்புகிறேன். குறும்படங்கள் குறித்து பரவலாக இருக்கிற கருத்துகள் பல உடைத்தெறியப்பட வேண்டியவை. பெரும்பாலான குறும்பட முயற்சிகள் வெறும் வணிக நோக்கத்தில் மேற்கொள்ளப்படுவதல்ல என்றபோதும் பல திறன் மிகுந்த பெரிய, சிறிய இயக்குநர்களின் பங்களிப்பு குறும்படங்களுக்கு உள்ளது. தற்போது பல்வேறு படைப்பாளிகள் குறும்படங்களை எடுத்து அவற்றை வெளியிட்டு பரவலான பார்வையாளர்களைப் பெற யுட்யூப் (YouTube) போன்ற இணையதளங்கள் உதவுகின்றன.நான் பார்த்த ஒரு குறும்படத்தின் உரலியை (URL) இந்த இடுகையில் தந்துள்ளேன்.

முதல் உறலி ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவைச் சொல்லும் படம். குழந்தைகள் எப்போதும் தகப்பனின் அன்பில் திளைக்கிறார்கள். தான் வளர வளர தந்தைக்கும் வயதாகிவிடுகிறது என்பதை எந்த மகனும் அறியத் துவங்குவதில்லை. தந்தையின் கை விரல்களைப் பற்றியபடியே தான் நாம் வெளி உலகைக் காண்கிறோம். கொஞ்சம் வளர்ந்த பிறகு, விரல்கள் அவசியமற்றுப் போகின்றன. தந்தைக்கும் மகனுக்குமான உறவு படகிற்கும் மரத்தச்சனுக்கும் உள்ள உறவைப் போன்றது. அந்த படகை செய்தவர் மரத்தச்சன் தான் என்றாலும் அவர் அதை ரொம்பநாள் வைத்திருந்து உரிமை கொண்டாட முடியாது. நீரில் விட்டுத்தான் ஆக வேண்டும். அது நன்றாக பயணித்தால் கரையில் நின்று மகிழலாம். கவிழ்ந்தால் அதே கரையில் நின்று கண்ணீர் வடிக்கத்தான் முடியும் - என்கிற எஸ். ராமகிரிஷ்ணனின் வரிகளை இப்படம் நினைவூட்டுகிறது. ஒரு முதிய தந்தைக்கு தேவை அக்கறையும் அன்பும் மட்டுமே. மன்னிப்பு, நன்றி மற்றும் அன்பு இவை மூன்றும்தான் மனிதனின் மகத்தான கண்டுபிடிப்புகள்.

இக்குறும்படம் பற்றி நிறைய சொல்வதற்கில்லை. சிறிய குறும்படம், மூன்றே கதாபாத்திரங்கள், ஒரே இடம். ஆனால் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்க கூடிய கருத்தும் காட்சியமைப்பும். படத்தின் தரமும் உள்ளடக்கமும் கவித்துவ நுட்பமும் பன்மடங்கு உயர்வாக இருக்கிறது. நான் யு ட்யூப்-இல் செலவிட்டதிலேயே உபயோகமான நேரம் என்று ஒன்று உண்டென்றால் அது இக்குறும்படம் பார்த்த நேரம் தான் - என்கிற யாரோ ஒருவருடைய பின்னூட்டமே இப்படத்தின் தரத்துக்கு ஓர் நற்சான்று. மழை விட்டு வெகு நேரம் ஆனபின்னும் மரத்து இலைகளில் இருந்து சொட்டிக் கொண்டிருக்கிற நீர் போல படம் முடிந்தபின்னரும் காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக மனதில் இருந்து கசியத் துவங்குகின்றன.

What is that? - Short Movie

What is that? - Short Movie