Thursday, January 21, 2010

செவ்வஞ்சலி..


மறைந்த மாமனிதர், எதிர்கட்சிகள் அனைவராலும் கூட மதிக்கப்பட்ட, சுதந்திர இந்தியாவின் ஈடு இணையற்ற மக்கள் தலைவர், தோழர் ஜோதிகிரன் பாசு அவர்களுக்கு என் செவ்வஞ்சலி. 23 ஆண்டுகள் அரியணையில் வீற்றிருந்த போதும் ஒரு சாமானியனைப் போலவே தன் வாழ்வை அமைத்துக்கொண்டவர் பாசு. லண்டனில் சட்டம் படித்த பாசு, அங்கேயே சிவப்புச் சிந்தனைகளால் கவரப்பட்டார். 1940 களில் தாயகம் வந்த பாசு, இந்தியாவின் கம்யூனிஸ்ட் அலுவலகத்தின் முழு நேர ஊழியனாகவே மாறினார். 1952 முதல் 1996 வரை நடந்த எல்லா தேர்தல்களிலும் பாசுவே வெற்றி பெற்றார்.

இந்திய முழுவதும் உள்ள தொழில் சங்கங்களின் வளர்ச்சிக்கு பாசு ஆற்றிய பணியே முழு முதற் காரணம். 1964 -ஆம் ஆண்டு, சித்தாந்த வேறுபாடுகளால், கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது, அதன் பொலிட்பீரோ உறுப்பினர் ஆனார். நவரத்தினங்கள் என்று அழைக்கப்பட்ட, மார்க்சிஸ்ட் காட்சியின் ஆரம்பகால 9 தலைவர்களில், பாசு மட்டுமே வெகு காலம் கட்சிக்கு தொண்டாற்றியவர்.

இந்திரா காந்தி இறந்த தருணம், நாடெங்கும் சீக்கியர்களின் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டபோது, கல்கத்தாவில் ஒரு சீக்கியர் கூடத் தாக்கப்படாதவண்ணம் பாசு பாதுகாத்தார். கதராடை கட்டா காந்தியவாதியாக விளங்கியவர் பாசு. ஒரு நல்ல அரசியல்வாதி என்பதைத் தாண்டி, சிறந்த மனிதரை இழந்துவிட்டோம்.

இறந்த பின்பும் ஒரு வழிகாட்டியாகவே இருக்கிறார் பாசு. அவர் இறந்தபின்பு, கடையடைப்போ, மறியல்களோ, அசம்பாவிதங்களோ ஏற்படவில்லை. மக்கள் காசைக்கொட்டி சமாதியும் உருவாக்கவில்லை. அவர் தன் உடலை தானமாகக் கொடுத்திருக்கும் விவரமே, அவர் இறந்த பின்புதான் தெரிந்தது.

போய்வாருங்கள் தோழரே, என்றும் இருப்பீர்கள் இத்தேசத்தின் அடித்தட்டு மக்கள் மனதில்!

Monday, January 18, 2010

ஹரிவராசனம் - வழக்கமும் வரலாறும்!

இந்த ஆண்டு எழுதும் முதல் பதிவு என்பதால் இறைவன் குறித்து எழுதுகிறேன். சென்ற மாதம் சபரிமலை சென்று சாஸ்தாவை தரிசித்து வந்தேன்.

சபரிமலை யாத்திரை என்னை எனக்கே அடையாளம் காட்டியது. ஹிந்து மதம் ஆறு விதமான வழிபாடுகளை கொண்டுள்ளது. காணாபத்தியம், கௌமாரம், சாக்தம், சைவம், வைஷ்ணவம், சௌரம் என்ற ஆறு வழிபாடுகளையும் தாண்டி எழாவது மதம் ஆக இருக்கிறது சாஸ்தா வழிபாடு. எண்ணிலடங்கா ஐயப்பன்மார்கள் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு வந்து ஐயனைத் தரிசிக்கின்றனர்.

அய்யன் சந்நிதானத்தில் சரணகோஷம் விண்ணைப் பிளக்கிறது. பெருவழிப்பாதை என்னும் காட்டுப் பாதையில் பக்தர்கள் வரும்போது, கொடிய மிருகங்கள் ஏதும் தொந்தரவு செய்வதில்லை. கானகமே அதிரும்படியாக சரணம் சொல்லியபடியே பகலிரவு பாராமல் பக்தர் கூட்டம் சன்னதி நோக்கி வந்துகொண்டிருக்கிறது. கடந்து வந்த பாதையின் இடர்கள் அனைத்தும் பதினெட்டு படிகளைக் கண்டவுடன் மறைந்து விடுகிறது.

மாலை நான்கு மணிக்கு நடை திறக்கும் போது சென்று, இரவு பதினோரு மணிக்கு நடை சார்த்தும் வரையில் சந்நிதானத்தில் இருந்தோம். நடை சார்த்தும் போது ஹரிவராசனம், பத்மஸ்ரீ யேசுதாஸ் அவர்களின் குரலில் ஒலிக்கிறது. பரவசத்தில் ஆழ்த்துகிற ஒரு பாடலாக இருக்கிறது ஹரிவராசனம். அந்தப் பாடல் குறித்து மேலும் பல விவரங்களை இப் பதிவில் சொல்ல விழைகிறேன்.

ஹரிவராசனம் கும்பக்குடி குளத்தூர் ஐயர் என்பவரால் 1950 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. மொத்தம் பதினாறு பதங்களைக் கொண்ட இப்பாடலில், முதல் ஏழு பதங்கள் மட்டுமே சபரிமலையில் பாடப்படுகின்றது. சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டு, மத்யமாவதி ராகத்தில் பாடப்படுகிற இப்பாடல் குறித்து இரு வேறு வரலாறுகள் கேள்விப்பட்டேன். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு மேல் சாந்தி திருமேனி ஈஸ்வரன் நம்பூதிரியின் நண்பர் கோபால மேனன் என்பவர்தான் இப்பாடலை ஆத்மார்த்தமாக பாடுவார். கோபால மேனன் அங்கேயே தங்கி இருந்தார். தேவசம் போர்டு உருவானபிறகு அவர் சந்நிதானத்தில் இருந்து அனுப்பப்பட்டார்.

பிறகு ஒருநாள் கவனிப்பார் இன்றி வண்டிப்பெரியாரில் உள்ள ஒரு தனியார் இடத்தில அனாதையாக இறந்து போனார். அவரது மறைவைக் கேள்விப்பட்ட அன்று மேல் சாந்தி சன்னதியை நடை சார்த்தும் போது அவரது நினைவாக இந்தப் பாடலைப் பாட ஆரம்பித்தார். அது என்றும் தொடர்கிறது என்று சிலர் கூறுகின்றனர்.

இன்னொரு சரார்களின் கூற்றின்படி, இப் பாடலைப் பாடும் வழக்கம், சந்நிதானத்தைப் புதிதாகப் பிரதிஷ்டை செய்த போது ஏற்பட்டது. 1955 - நடந்த ஒரு பெரும் தீ விபத்தில் சன்னிதானம் முற்றிலும் சேதமடைந்ததை தொடர்ந்து, சுவாமி விமோச்சனானந்தா தென்னகம் எங்கும் சுற்றுப்பயணம் செய்து ஐயப்ப பக்தியைத் தழைக்கச் செய்தார். அவர் மூலமாகவே இப்பாடல் சுவாமிக்கு இரவு நேரத் தாலாட்டாக பாடப்படுகிறது. ஒவ்வொரு பதம் பாடி முடியும் போதும் ஒவ்வொரு கீழ் சாந்தியும் ஒன்றன் பின் ஒன்றாக சன்னதியை விட்டு வெளியில் வருவர். பாடல் முடிவடைந்தபின், மேல் சாந்தி, ஸ்ரீகோவிலில் உள்ள தீபங்களை ஒவொன்றாக சாந்தி செய்து விட்டு வெளிவந்து நடை சார்த்துவார்.

சைவ வைஷ்ணவ பேதம் இன்றி பாடப்படும் இப்பாடல், கேட்பார் நெஞ்சை கரைக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.