Wednesday, October 3, 2012

தமிழ்ப் பாட்டுதான் வேண்டும்

முதன்முதலாகத் தமிழ்நாட்டில் பணம் கொடுத்துப் பாட்டுக் கேட்டவர் சிவபெருமான். அதுவும் தமிழ்ப் பாட்டுதான் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

பரந்தபாரிடம் ஊரி டைப்பலி
பற்றிப் பாத்துணுஞ் சுற்ற மாயினீர்
தெரிந்த நான்மறையோர்க் கிட மாய திருமிழலை
இருந்து நீர்தமி ழோடி சைகேட்கும்
இச்சை யாற்காசு நித்தல் நல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீர் அடி யேற்கும் அருளுதிரே

பொழிப்புரை:

மிக்க பூத கணங்களை, ஊர்களில் பிச்சையேற்று அதனைப் பகுத்து உண்ணும் சுற்றமாக உடையவரே, ஆராய்ந்த நான்கு வேதங்களை உணர்ந்தோராகிய அந்தணர்க்கு இடமான திருமிழலை யுள், அரிய, குளிர்ந்த வீழி மரத்தின் நிழலை இடமாகக்கொண்டவரே, நீர், இனிதிருந்து இசையைத் தமிழோடு கேட்கும் விருப்பத்தால், அத்தகைய தமிழைப் பாடியோர்க்குப் பொற்காசினை நாள்தோறும் வழங்கினீர் ; அதுபோல, அடியேனுக்கும் அருள் செய்யீர்.

-சுந்தரமூர்த்தி நாயனார், திருவீழிமிழலைப் பதிகம் எட்டாவது பாசுரம்

Tuesday, October 2, 2012

கல்கியின் கவிதைகள்


சங்கீத மேடைகள் அக்காலத்தில் தமிழை பகிஷ்கரித்து தெலுங்கை வளர்த்துவந்தன. இந்நிலையை மாற்ற ஸ்ரீமான் கல்கி கிருஷ்ணமூர்த்தி கங்கணம் கட்டிக்கொண்டு எடுத்த முயற்சிகளில் ஒன்றுதான் தமிழிசை இயக்கம். இவ்வியக்கம் பல தமிழ் ஆர்வலர்களால் போஷிக்கப்பட்டு வந்தது.தெலுங்குக் கீர்த்தனைகள்தான் உயர்ந்தவை என்று இவ்வியக்கத்திற்கு எதிராகத் சிலர் செய்துவந்த விதண்டாவாதங்கள்  கல்கியின் எழுத்துக்களால் தவிடுபொடி ஆகிப்போயின. பேருக்குத் துக்கடாவாகப் தமிழ் பாடிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் முழுமையாக வரிகளின் பொருள் உணர்ந்து பாடவும், கேட்பவர்கள் சங்கீதம் (இசை) மட்டுமின்றி, சாகித்தியத்தையும் (பாடலின் பொருள்) புரிந்து கொண்டு இன்புறவேண்டும் என்பதே  கல்கி அவர்களின் அவா.

தமிழில் நல்ல கீர்த்தனங்கள் இல்லை பலர் நொண்டிச் சாக்கு சொல்லிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் ஸ்ரீமான் கல்கி தமிழின் சிறந்த பாடலாசிரியர்களான ஸ்ரீ அருணாச்சலக் கவிராயர், ஸ்ரீ முத்துத் தாண்டவர், ஸ்ரீ பாபநாசம் சிவன், மகாகவி சுப்ரமணிய பாரதியார், ஸ்ரீ சமயாசாரியான் ஆகியோரின் பாடல்களைப் பற்றி எடுத்துரைத்து அவற்றை மேடையில் பாடுமாறும் பரிந்துரைத்தார். தவிர அவரே சில தமிழ்க் கவிகளை இயற்றினார். சில பாடகர்களின் பிடிவாதத்தினால் நமக்கு கல்கியின் நல்ல கவிகள் கிடைத்தன. அவற்றை நீங்கள் அன்பன் ஓஜஸ் எழுதியுள்ள  பதிவில்  பார்க்கலாம்.
அதன் உறலி: http://naarchanthi.wordpress.com/2012/09/09/kalki/