Saturday, October 17, 2009

தீபாவளிப் பதிவுகள்


தீபாவளி அன்று எழுதுவதால் தீபாவளி குறித்தே எழுதுகிறேன். தெருவெங்கும் வெடிக் காகிதங்கள் சிதறிக்கிடக்கும் இந்த தீபாவளி சில புதிய சிந்தனைகளைத் கிளறி விடுகிறது. சிறுவனாய் இருந்தபோது கிட்டிய இன்பமோ குதுகலமோ குறைந்திருக்கிறது. வளர வளர உள்ளுக்குள் இருக்கும் குழந்தையை தொலைத்து விடுகிறோமா அல்லது குழந்தைப் பருவத்தின் தீபாவளி உற்சாகம் வெறும் மாயையா என்பது தெரியவில்லை.

நேற்று இரவு வரை புதிய ஆடை வாங்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லை. புதிய ஆடை உடுத்தவேண்டும் என்கிற சம்ப்ரதாயம் குறித்து வீட்டிலுள்ளோர் அதிகம் வற்புறுத்தவே, அவர்கள் எண்ணத்தின் பொருட்டு, ஆடை ஒன்று வாங்கிவந்தேன். மிக மெதுவாகவே எழுந்து, வாழ்த்த வேண்டியவர்களை வாழ்த்தி, வணங்க வேண்டியவர்களை வணங்கியதில் பாதி நாள் போய்விட்டது.

அதன் பின் வாழ்வின் முக்கிய தருணங்கள் எல்லாம் தொலைக்காட்சியால் ஆக்ரமிக்கப்படுகிறது. என்ன செய்வது என்பது தெரியாமல் எல்லாரும் அதன் முன் உட்கார்ந்திருக்கிறோம். அடுத்தவன் அனுப்பிய குறுஞ்செய்திகளை எல்லாம் தீபாவளி வாழ்த்து என்கிற பெயரில் பார்வர்ட் செய்து கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்திற்கு அண்டை வீட்டில் பல ஆண்டுகளாக் குடி இருப்பவனின் பெயர் தெரியாவிட்டாலும், உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்ன திரைப்படம் என்பது தெரிந்து இருக்கிறது. புதிய ஆடை உடுத்தி, தான் விரும்பிய பெண்ணிடம் அதை காட்ட வேண்டும் என்று அவள் வீடிருக்கும் தெருவில் அலைந்து கொண்டிருந்த என் நண்பனின் நினைவு வந்தது. அவன் காதலியோ அவன் இருக்கும் தெருவில் அவனைத்தேடி அலைந்து கொண்டிருந்தாள். இலக்கியக் காதல் இதுவல்லவோ என்று அவனை நங்கள் பகடி செய்து கொண்டிருந்தோம். பொய்க்கோபமும் சந்தோஷமுமாக அதை அவன் எற்றுக்கொண்டிருந்தான். வாழ்வின் நிச்சியமற்ற தன்மை எல்லோரையும் ஆளுக்கொருப்பக்கம் அலைக்கழித்தாலும், உள்ளார்ந்த அன்பு இன்றும் இருப்பதால் உலகம் இயங்குகிறது.

முன்பெல்லாம் வெடி வெடிப்பதில் இருந்த ஆர்வம், "வெடியாபீஸ்" என்கிற வெடி தொழிற்சாலைகளின் குழந்தை தொழிலாளர்களின் நிலை கண்ட பின் வடிந்து விட்டிருக்கிறது. காலை எட்டு மணியில் இருந்து மாலை ஐந்து மணி வரை அயராது வெடி சுற்றும் மனிதனை எந்திரமாகும் (dehumanizing) தொழிற்சாலைகளும், பள்ளிக் கல்வியை அடியோடு தொலைத்து விட்ட நம் இளைய தலைமுறையும் விவரிக்க இயலாத வேதனையை ஏற்படுத்துகின்றன. வயதாகிவிட்டதால் வெடி வெடிக்க பயம் உனக்கு என்கிற வீட்டோரின் குற்றச்சாட்டு சிரிப்பையும் வருத்தத்தையும் சேர்ந்தே உண்டாக்கியது. குடிசைகள் பற்றிய கவலை இன்றி விண்ணில் செலுத்தப்படும் வெடிகள் பயத்தை உண்டாக்கின. வழக்கமாக தீபாவளிக்கு சில நாட்கள் முன்பு வரை மழை இருப்பதால் குடிசைகள் சற்று ஈரப்பதமுடன் இருக்கும். வெடிகள் ஏற்படுத்தும் இழப்புகள் குறைவே. இம்முறை சிறிதும் மழை இல்லாததால் என்ன ஆகுமோ என அச்சம் உண்டாகியது. தெருவெங்கும் வெடித்து, வான் வெளி எங்கும் புகை கக்கும் இப்பண்டிகை என் போன்ற விவசாய கிராமம் சார்ந்த மனிதனை அந்நியமாக்குகிறது. சுற்றுச்சுழல் அமைப்புகள் பெரும் கூச்சலிட்டும் எவருக்கும் சூழல் மாசு குறித்தோ, ஓசை மாசுபாடு பற்றியோ சிறிதும் அக்கறை இல்லை என்பது வெட்கம் கொள்ளச்செய்கிறது.

ஜவுளி, போக்குவரத்து, சிறு வணிகம் மற்றும் சிவகாசியை சேர்ந்த சிறுதொழில் முனைவோரின் வாழ்வியல் வளம் பெறும் என்பதால் மட்டுமே தீபாவளியை ஒரு தொழிற்சங்க ஆதரவாளனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

6 comments:

Unknown said...

"தமிழ்ச் சமூகத்திற்கு அண்டை வீட்டில் பல ஆண்டுகளாக் குடி இருப்பவனின் பெயர் தெரியாவிட்டாலும், உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்ன திரைப்படம் என்பது தெரிந்து இருக்கிறது."
உலக நாயகனை ரசிக்க நேரமிருக்கும் நமக்கு உலக ஜீவன்களை கவனிக்க நேரமில்லை என்ன செய்வது?
இது பதார்த்த நாளில் வந்த ஒரு எதார்த்த பதிவு!:)

Bary said...

சிறிதும் டால்டா கலக்காமல் அக்மார்க் நெய்யினால் செய்த தீபாவளி சிறப்பு இனிப்பு வகையை போல இருந்தது நீங்கள் எழுதிய பதிவு. படித்தேன், சுவைத்தேன்.

Unknown said...

Thanga thalaivar balu sir valgha valamudan sir....
Content is super really touching we r missing a lot...
Television grab our beautiful times its highly true...

Vijay Jerold said...

அழகு தமிழில்,
நகைச்சுவையும் சோகமும்,
மனோ தத்துவம் முதல் கம்யூனிச தத்துவம் வரை,
மனிதனின் மனச்சாட்சி.

Prasanna said...

மிகவும் உள்ளார்ந்த பதிவுகள் . தீபங்களின் திருநாள் என்பதைவிட பட்டாசுகளின் பண்டிகை : தீபாவளி . வளர வளர உள்ளுக்குள் இருக்கும் குழந்தையை (child ego state ) தொலைத்து விடுகிறோமா ? ஆம். இது நம்முடைய தவறு . தீபாவளிஇன் தவறு அல்ல. நம்முடைய வாழ்முறை வண்ணமயமானது . நம்முடைய தர்மத்தில் தான் எத்தனை பண்டிகைகள். அனைத்துமே ஆழ்ந்த அர்த்தங்களை உடையவை. நாம் தான் பார்வையை இழந்து விட்டோம். ஓஷோ சொல்வது போல வாழ்க்கையே ஒரு திருவிழா.
குழந்தை தொழிலாளர்களின் நிலை குறித்து தீபாவளி அன்று மட்டுமே பலருக்கு நினைவு வருகிறது. ஹோட்டலில் டிகிரி காபி சுவைக்கும் போது , மேஜை
துடைக்கும் சிறுவனை பற்றி நீனைதீர்களா? இல்லையே. மருந்து கடையில் மிரண்டு போய் நிற்கும் , புதிதாக சேர்ந்த சிறுவனை வசவு அல்லவா செய்கிறீர் ? ஏன் இந்த த்டீர் பாசம் தீபாவளி அன்று மட்டும்? அதற்காக குழந்தை தொழிலாளர் முறையை ஆதரிக்கவேண்டும் என்று பொருள் கொள்ள வேண்டாம் . குழந்தை தொழிலாளர் முறை ஒரு தேசத்திற்கு வெட்ககேடு. பொருளாதார வளர்ச்சி , உள்நாட்டு உற்பத்தி மற்றும் g 20 போன்ற அனைத்தும் அர்த்தமற்றவை, இந்த குழந்தை தொழிலாளர்கல் நிலை உள்ள வரை. கட்டாய கல்வி சட்டம் ஏட்டில் மட்டுமே உள்ளது மற்ற பல சட்டம்களை போல . நடைமுறைக்கு உகந்த வழிமுறைகள் ஆராய படவேண்டும். உணவு , உடை ,இருப்பிடம் மற்றும் முக்கியமாக ஊக்கதொகை வழங்கப்படவேண்டும். இலவச வ்ண்ணத்தொலைகாட்சிக்கு ஆகும் செலவை விட இது அர்த்தமுள்ளதாக இருக்கும்.
அதே போல தீபாவளி அன்று தான் சுற்று புற சூழல் குறித்து கவலை அதிகரிக்கும் . மாசு கட்டுப்பாடு சான்றிதழ் நம்முடிய இரு சக்கர வாகனத்திற்கு இருக்கிறதா?
படாசுகளால் தான் தீபாவளி இன்னும் ஒரளேவேனும் உயிர்ப்புடன் உள்ளது .. இல்லைஎனில் அந்த நாளையும் முழுவதுமாக தொலைகாட்சியில் தொலைத்திருப்போம்.
நம் உள்ளத்தில் ஒளி ஏற்றினால் , ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

நன்றி பாலு , மிகுந்த சிரமப்பட்டு தமிழில் கணிப்பொறியில் எழுத , கற்க உங்கள் வலை பதிவு எனக்கு கிரியா ஊக்கி . இனி வரும் காலங்களில் இன்னும் வேகமாக டைப் செய்யவும் , விவேகமாக சிந்திக்கவும் முயற்சிக்கிறேன்.

Vaish said...

Vaish Arumaina Phadhivugal. Paditthavudan, Naan En Siru Vayadhil Vedi Vedikka AArvatthil Odiyadhaium, Ippozdhu Vedi Vendam Enru Kooriyadhium ninaitthuk kolkiren.