Sunday, November 3, 2013

அவன நிறுத்தச் சொல்லு, நான் நிறுத்துறேன்...


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று (2/11/2013) முடிவுற்றது. இதில் இந்திய அணி 3-2 என்கிற கணக்கில் இந்தத் தொடரைக் கைப்பற்றியது. கோப்பையை இந்திய அணியின் கேப்டன் டோனியிடம் வழங்கும் நிகழ்ச்சியில் வர்ணனையாளர் ரவி சாஸ்த்ரி மற்றும் டோனி ஆகியோருக்கு இடையே நடந்த உரையாடல் இங்கே தரப்பட்டுள்ளது.

Ravi Shastri: 
"WELL MS, YOU NEED TO IMPROVE YOUR TEAM BOWLING, IT WAS VERY CLOSE IF AUSSIES WOULD HAVE WICKETS IN HAND THEY COULD HAVE TAKEN MATCH AS WELL AS SERIES WITH THEM. OUR TEAM’S BOWLING NEEDS TO BE IMPROVED”



Dhoni: (In reply): 
 "YEAH WELL WE CHASED 350+ SCORES TWO TIMES IN THIS SERIES AND ALSO SCORED 383 TODAY AND NO ONE REALLY TALKED ABOUT AUSTRALIA’S BOWLING! I AM NOT GOING TO BE UNFAIR WITH MY BOWLERS."

ஏன்டா தம்பி நீ எல்லாப் பாடத்திலும் முதல் மதிப்பெண் வாங்கலைன்னு ஒரு அப்பா கேட்டதுக்கு அவர் மகன், பக்கத்துக்கு வீட்டுக்காரன் 3 பாடத்தில் பெயில், அவன நீ எதுவுமே கேக்க மாட்டேன்கிற, நான் பாஸ் ஆகிட்டேன் அதப் பத்தி மட்டும் பேசுன்னு கத்திக் கூப்பாடு போட்டானாம்.

நாயகன் திரைப்படத்தில் வரும் வசனம் அவன நிறுத்தச் சொல்லு, நான் நிறுத்துறேன்... கேட்ட மாதிரியே இருந்துது எனக்கு.

Wednesday, July 24, 2013

பழம் நீங்கள் அப்பா, ஞானப்பழம் நீங்கள் அப்பா ;)

மோடிக்கு விசா தரக்கூடாது என்று மடல் வரையும் மகான்களே,

பேத்தியின் பேறுகால உதவிக்குச் செல்லும் பாட்டிகளின் விசாக்கள் மறுக்கப்படுவது குறித்துக் கிஞ்சித்தேனும் கவலை கொண்டதுண்டா ?

வால்மார்ட் உள்ளே வந்தபோது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கால்மாட்டில் கடனே என உட்கார்ந்து இருந்துவிட்டு இப்போது என் இத்தனை ஆர்ப்பாட்டம் ?

அட்லாண்டாவில் நாக்கு செத்துக் கிடக்கும் நம்ம ஊர் நமச்சிவாயத்திற்கு அவன் தாய் தன் கையால் செய்த ஆவக்கா உறுகாயையும் தளி வடாத்தையும் அரிசி அப்பளாத்தையும் கொண்டு செல்ல அனுமதிக்காத அமெரிக்க இமிக்ரேஷன் மீது கோபம் கொண்டு தாங்கள் ஒரு கடிதம் கூட எழுதவில்லையே ஏன் ?
 

Monday, July 22, 2013

அனுதாபம் தெரிவிப்போருக்கு என் அனுதாபங்கள்

 
ஒருவரது மரணத்திற்கு சமூக வலைதளங்களில் அனுதாபம் தெரிவிக்கப் போகிறீர்களா? அப்படியானால் நீங்கள் உங்களையே கேட்டுக் கொள்ள சில கேள்விகள் உள்ளன.

1) இறந்தவர் திரைப் பிரபலமா ?
2) இறந்தவர் அரசியல் பிரபலமா ?
3) பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவரா ?

இந்தக் கேள்விகள்  மூன்றுக்கும் உங்களிடம் பதில் இருந்தால் நீங்கள் அனுதாபத்தைத் தெரிவிக்கலாம்.

திரைப் பிரபலமா  என்கிற கேள்விக்கு ஆம் என்று பதில் வந்தால், நீங்கள் துணிந்து களம் இறங்கலாம். இவன் அப்டி என்ன கிழிச்சுப்புட்டான் என்கிற ரீதியில் பதில்கள் வரும், அதைக் கண்டு அஞ்சுவது பேதைமை. இது போதாதென்று செத்தவன் ஜாதியைக் குறித்து தாறுமாறாக விமர்சனங்கள் வரும், இதற்கு நாமார்க்குங் குடியல்லோம் என்பது போலத் துணிந்து  பதிலுரைக்க (குரைக்க)  வேண்டும்.

இரண்டாவது: கேள்வி எளிது. அரசியல் பிரபலம் என்றால் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒரு சிறந்த தலைவர் என்கிற மாதிரி ஓரிரு சொற்களைச் சேர்த்து இரங்கலைத் தெரிவித்தால், யாரும் உங்கள் மீது தனிப்பட்ட தாக்குதலில் இறங்க மாட்டார்கள் என்பது திண்ணம்.

மூன்றாவது: பெரும்பான்மை சமூகத்தவர் என்றால், வாய் மற்றும் இன்ன பிறவற்றை அடைத்து அமைதி காத்தருளி, எதாவது 1980 களில் வந்த இளையராஜா பாடல் ஒன்றைப் பற்றி சிலாகித்து 4 வரி எழுதிவிட்டு ஜென் நிலையில் இருப்பது சாலச் சிறந்தது. நமது தேசம் மதச்சார்பற்றது. சினிமா சார்பற்றது என்றோ அரசியல் சார்பற்றது என்றோ இல்லை.  மறந்துவிடக்கூடாது.

Friday, June 21, 2013

தண்ணிதான் - வேறன்ன ?

மழை நீர் சேகரிப்புத் தொட்டி கட்ட சொன்னா, இது எதுக்கு வெட்டிச் செலவுன்னு அலுத்துக்கிட்டு இப்ப வந்து 'தண்ணியைக் காசு குடுத்து வாங்க வேண்டி இருக்கு இந்த நாட்டில்' அது இதுன்னு பொலம்பறதெல்லம் சின்னப்புள்ளத்தனம். 

ஊரெல்லாம் எத்தனயோ கம்பனிகள் ராட்சத ஆழ்குழாய்களை வைச்சு நாள் ஒரு நாளுக்கு ஒரு கோடி லிட்டர் வரை கிணறு இறவை பாசனப் பகுதிகளில் தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றன.

எல்லா ஏரியையும் தூர்த்து அப்பார்ட்மெண்ட் கட்டிக்கிட்டு குடியேறி, இப்ப சமுக வலைதளங்களில் வந்து ஐயஹோ, தண்ணியக் காசு குடுத்து வாங்க வேண்டிஇருக்கே, 2 ரூபா குடுத்து மூச்சா போக வேண்டி இருக்கே-ன்னு அழுகிறது என்னா நியாயம் ?

தங்கம்னா ஆலாப் பறந்துட்டு தண்ணிய மட்டும் இஷ்டத்துக்கு செலவு பண்ணிட்டு என்ன பேச்சு வேண்டிகடக்கு நமக்கு ?

அன்றே சொன்னார் சர்ச்சில். (கடைசி வரியைப் படிங்க மக்கழே - மறக்காம)

(This is Sir winston churchil wrote about us in 1946)

Power will go to the hands of rascals, rogues, freebooters; all

Indian leaders will be of low caliber and men of straw. They will

have sweet tongues and silly hearts. They will fight amongst

themselves for power and India will be lost in political squabbles. A

day would come when even air & water would be taxed in India."
3 அடியில தண்ணி வந்த குளித்தலை மாதிரி ஒரு ஊர்ல கேணி வத்திப்போய் வறண்டு கிடக்கு, இனிமே காவிரி ஆத்து மணல்லியே நேரா போர் போட்டாலும் 1000 அடி வரைக்கும் போடணும்னு ஆகப் போகுது. அப்பவும் நீங்க அடங்க மாட்டீங்கடா. 

Wednesday, January 30, 2013

வாழ்க்கை ஒரு வட்டமே!

ஒரு ஊரில் ஒரு அழகான/சுமாரான ஒரு பெண் இருந்தாள். அவளுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பிய அவளது பெற்றோர், ஒரு நல்ல மனிதனை/ இளைஞனை அவளுக்கு திருமணம் செய்துவைக்க நினைத்தனர். தன் அழகின் மீதுள்ள கர்வத்தால் அவள் அவனை நிராகரித்தாள் (அவன் அழகாய், வலிவாய் இருந்த போதும்). 

அந்தப் பெண்ணின் தந்தை அவளிடம் உனக்கு தகுதியான மாப்பிள்ளை யார் என்று கேட்டதற்கு, அந்தப் பெண் இந்த நாட்டிலேயே மிக உயர்ந்தவர் யவரோ அவரையே திருமணம் செய்வேன் என்றாள். அவளது தந்தை இந்த நாட்டிலேயே உயர்ந்தவர் நம் நாட்டு மன்னர்தான் என்று வாதிட்டார். 

அந்தக்கணமே அப்பெண் மன்னர் மீது காதல் கொண்டு அவர் போகுமிடத்துக்கெல்லாம் அவரைப் பின்தொடர்ந்தாள். மன்னர் ஒருநாள் நகர்வலம் செல்லும்போது தெருவில் வந்த சன்யாசி ஒருவரைக் கண்டு அவர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். இக்காட்சியைக் கண்ட அந்தப் பெண் (அதாவது, நமது கதையின் நாயகி ஆகப்பட்டவள்) ஒரு மன்னரே விழுந்து வணங்கும் குணநலன்கள் குறைவறப்பெற்ற இந்த மஹாபுருஷரே (அதாவது, நமது சன்யாசி) தனது நாயகன் எனக் கருதி, அவரைப் பின் தொடர்ந்தாள். அந்த சன்யாசி தெருவில் நடந்து செல்லும் போது வாய்க்கால் ஓரத்தில் வீற்றிருந்த ஒரு தொந்தி கணபதி விக்ரகத்தைப் பார்த்தார். உடனே பரபர வென்று 10 தோப்புக்கரணம் போட்டார். இக்காட்சியைக் கண்ட அந்தப் பெண் ஒரு மஹா புருஷரே இப்படிப் பதறித் தவித்து தோப்புக்கரணம் போடுகிறார் என்றால், இந்தச் சிலை எவ்வளவு மதிப்புக்குரியது என்று எண்ணி அந்தக் கணபதியே தனது மணாளன் என்று முடிவு செய்தாள் (அதானே இயல்பு!). அவர் அருகில் அமர்ந்து கொண்டு அவரயே வெறித்துப் பார்க்க ஆரம்பித்தாள். அப்போது தெருவில் தேமே என்று சென்று கொண்டிருந்த ஒரு நன்றி உள்ள பிராணி ஒன்று அவர் (கணபதி) மீது அல்பசங்க்யை செய்து விட்டு அதன் போக்கில் சென்றது. இதைக் கண்ணுற்ற அந்த மங்கைநல்லாள் அப் பிராணியின் மீது பெருமதிப்புக் கொண்டாள் (இதுவும் நியாயம்). அந்தப் பிராணியின் மீது கொண்ட தீராக் காதலால் அதையும் அவள் பின் தொடர்ந்தாள். அது சும்மா இருக்காது ஒரு தெருவுக்குள் புகுந்து சும்மா சிவனே என்று கிடந்த ஒரு சிறுவனைப் பார்த்துக் குரைக்க ஆரம்பித்தது. அந்தச் சிறுவன் அதனால் கலவரமாகி, ஒரு கல்லைக் கொண்டு அடித்து நமது பிராணியாரை அலற (ஊளையிட) விட்டான். நமது கதாநாயகி தன் மனதில் வரித்திருந்த நாயவன்/தூயவன்/காதலன் தாக்கப்பட்டது அறிந்து வேதனையுற்றபோதும் தனது முயற்சியில் சற்றும் மனம் தளராமல் தனது பெரிதினும் பெரிது கேள் என்னும் கொள்கைக்கேற்ப அச்சிறுவனைப் பின் தொடர ஆரம்பித்தாள் (எத்தனை இடைஞ்சல்களடா ஓர் உண்மைக் காதலுக்கு!). இதற்கிடையில் நம் பிராணியார் அலறல் காரணமாய் தூக்கம் கலைந்த ஒருவன் அச்சிறுவனை வைதான் (திட்டினான்). காதலன் வேட்டையில் களைத்துப் போனாள் நமது கதாநாயகி. இதற்கு மேலும் பொறுக்க/பொருக்க முடியாது என்று நினைத்த நம் பத்தினித் தெய்வம், ஆஹா சிறுவனை விரட்டும் இவர்தான் எவ்வளவு உயர்ந்தவர் என்று எண்ணி அவரையே தன் இல்லான் ஆக ஆக்கிக்கொள்ள நினைத்தாள். இந்த வீரர்தான் இந்தப் பெண்ணின் தந்தை முதலில் அந்தப் பெண்ணுக்காகப் பார்த்து வைத்தவர். 

கதை நிறைவடைந்தது. இதில் படிப்பினைகள் ஏதுமில்லை, வாழ்க்கை மட்டுமல்ல காதலிகளும் காதலர்களும் ஒரு வட்டமே என்பதைத் தவிர. 

இக்கதை (?!) விண்ணை முட்டும் அளவிற்கு பல சிக்கல்கள் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் நேரத்தில் எழுதியது(!). மூலக்கதை என்னுடையதல்ல. முழுக்கதையும் எனக்கு ஏற்ப்புடையதல்ல.

Tuesday, January 22, 2013

முழிபெயர்ப்பு - அமிதாப்பும் கூகிள் ட்ரான்ஸ்லேட் காமெடிகளும்

நடிகர் அமிதாப்பச்சன் (@SrBachchan) அவர்கள் தமிழில் எதோ சில ட்வீட்டுகள் போட்டு வைத்து இருந்தார். தெரியாத்தனமாக அதைப் படித்துத் தொலைத்து விட்டேன்.

அவரின் தமிழ் ட்வீட்கள் பின்வருமாறு:


  • நம்முடைய விட ஒழுக்கமான தமிழ் சினிமாவில் .. பெரிய ஸ்டூடியோக்கள் சில சென்னை தொழிலாள ஆரம்ப ஆண்டுகள்
  • AR Rehman மூலம் 'kadal' என்ற ... இசை குறிப்பாக ஒரு பாடல் விதிவிலக்கான குறிப்புகள் உள்ளன! அவரை சென்னை திருமண நேரடி விளையாட கேள்வி!
  • தமிழ் சில பெரிய இசை கேட்டு ... அதன் வசீகரிக்கும்! குறிப்புகள் singing முயற்சி ... உண்மையில் கடினமான இருந்தது!
  •  ஹலோ .... எல்லோரும் எப்படி இருக்கும் ... மரியாதையும் அன்பும்

படிச்சுடிங்களா மகாஜனங்களே? நல்லது!

நானும் படிச்சேன். ஆனா என்னனு புரியாம நான் தவித்த தவிப்பை விளக்க சங்க இலக்கியப்பாடல்களால கூட முடியாது. கோணங்கி, ஜெயமோகன், வைரமுத்து, இளையராஜா (?!) எழுத்துகள் மாதிரி அமிதாபும் எழுதறாரேன்னு வியந்து போனேன். என் மரமண்டையில் எதுவுமே ஏறல. நானும் விதவிதமா படிச்சு பாத்தேன். இதுக்கு  என் ப்ரோக்ராமே பெட்டெர்னு நினைச்சு விட்டுட்டேன். அப்புறம் தான் எனக்கு கூகிள் ட்ரான்ஸ்லேட் (Google Translate) செய்து வரும் மகத்தான பணிகள் நினைவுக்கு வந்தன.


இதுல சிக்கினது என்னவோ அமிதாப்தான், ஆனா சின்னாபின்னமானது நமது தாய் மொழியாம் எங்குமுள தென்தமிழ்.

Hello How do you do, Love and Respect-தான் 'ஹலோ .... எல்லோரும் எப்படி இருக்கும் ... மரியாதையும் அன்பும்'-ன்னு முழி பெயர்ப்பு பண்ணிருக்கு நம்ம கூகிள்.  ஹையோ ஹையோ! 


புள்ளியியல் மெஷின் மொழிபெயர்ப்பு அட  அதாங்க Statistical Machine Translation என்கிற நுட்பத்தைப் பயன்படுத்துது நம்ம கூகிள். இதப்பத்தி ஏற்கனவே நான் ரொம்ப அறுத்து தள்ளிட்டேன்.  மறுபடியும்  ஒரு சாம்பிள் பாக்கிறீங்களா? பாருங்க.
எது எப்புடியோ, தமிழனே தமிழ்ல ட்வீட் போட்டா அது ஒரு மானக்கேடு/அவமானம்னு நினைக்கும் போது இவர் தமிழ்ல ட்வீட்டுரது பாராட்டப்படவேண்டிய விஷயம்.



Monday, January 14, 2013

ஹாப்பி பொங்கல்!!!!!!!!!!!


ஒரு டெல்டா விவசாயியின் பொங்கல் வாழ்த்துப்பா:



குறுவை,  சம்பா,  தாளடி  எல்லாம் 
பொய்த்துப் போன நிலையிலும்
நான் கூவுவேன் 'ஹாப்பி  பொங்கல்'.

பொங்கல்  பானையில போடக் கூட 
அரிசி இல்லாத  கொடுமையிலும் 
நான் உரைப்பேன்  'ஹாப்பி பொங்கல்' 

போர்வெல் இருந்தாலும் கரண்ட் இல்லாமல்
கையைப் பிசைந்து நிற்கும் நிலையிலும்
நான் கர்ஜிப்பேன் 'ஹாப்பி  பொங்கல்'.

வாங்கின கடனுக்கு வட்டி கட்ட  
கேரளாவுக்கு தினக்கூலியாப் போகும் போதும் 
ஞான்  பறையும்  'ஹோப்பி பொங்கல்'.

அமைச்சர்கள் குழு வந்து பார்த்திருக்கு
நிவாரணத்தை எதிர்நோக்கி என் காஞ்ச வயல் காத்திருக்கு
ஆகவே நான் செப்புவேன் 'ஹாப்பி பொங்கல்' 

காவிரி ஆறுல வரலைனா என்ன ?
டாஸ்மாக்ல பாருல வருதுடா தண்ணி.
அதனால நான் 'சத்தமாச் சலம்புவேன்'.
'ஹாப்பியோ  ஹாப்பி  பொங்கல் டு ஆல் டமிலன்ஸ்!'



Saturday, January 12, 2013

சுவாமி விவேகானந்தருக்கு இந்த எளியவனின் நமஸ்காரங்கள்.




கொல்கத்தா நகரத்தில் ப்ளேக் நோய் தன்  கோரதாண்டவத்தை ஆடிக்கொண்டிருந்த காலத்தில், ராமகிருஷ்ண மடம் சார்பாக சுவாமி விவேகானந்தர் நோயால் பாதிக்கப்பட்ட  மக்களுக்காகத் தொண்டற்றிவந்தார். அப்போது ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியாமல் சீடர்கள் என்ன செய்வது என்று விவேகானந்த சுவாமிகளிடம் சென்று ஆலோசனை கேட்டனர். அதற்கு விவேகானந்தர் 'மடத்தையும் அதன் சொத்துக்களையும் விற்க வேண்டி வந்தாலும் பரவாயில்லை, எப்படியாவது நிதி திரட்டி வேண்டிய மருந்துப் பொருட்களை வாங்குவோம், இந்த நோயை விரட்டி அடிப்போம், துயர் தீர்ந்த பின் மறுபடியும் மக்களிடம் கை ஏந்திச் சென்று நிதி பெற்று மடத்தைக் கட்டிக் கொள்வோம்' என்று ஆலோசனை வழங்கினார்.  மடத்தை விற்றேனும் மக்கள் துயர் துடைக்க எழுந்த மகான் எங்கே, மடத்தைக் காக்க நீதிமன்றப் படியேறிப் போராடிக்கொண்டிருக்கும் பதர்கள் எங்கே? இன்று அவரது நூற்றைம்பதாவது பிறந்தநாள். சுவாமி விவேகானந்தர் என்கிற பெயரைச் சொன்னாலே கம்பீரம், தைரியம், பொறுமை, வீரம் எல்லாம் பீறிட்டு எழும்.  என்றைக்கும் குன்றாத இளமை வேண்டும் என்று அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியில் சொன்னது சுவாமி விவேகானந்தருக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. அவருக்கு மட்டுமே அது  பொருந்தும்.  எத்தனயோ மகான்கள் இந்த ஞான பூமியிலே, அவர்களில் ஒருவராம்  சுவாமி விவேகானந்தருக்கு இந்த எளியவனின் நமஸ்காரங்கள்.