Wednesday, January 30, 2013

வாழ்க்கை ஒரு வட்டமே!

ஒரு ஊரில் ஒரு அழகான/சுமாரான ஒரு பெண் இருந்தாள். அவளுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பிய அவளது பெற்றோர், ஒரு நல்ல மனிதனை/ இளைஞனை அவளுக்கு திருமணம் செய்துவைக்க நினைத்தனர். தன் அழகின் மீதுள்ள கர்வத்தால் அவள் அவனை நிராகரித்தாள் (அவன் அழகாய், வலிவாய் இருந்த போதும்). 

அந்தப் பெண்ணின் தந்தை அவளிடம் உனக்கு தகுதியான மாப்பிள்ளை யார் என்று கேட்டதற்கு, அந்தப் பெண் இந்த நாட்டிலேயே மிக உயர்ந்தவர் யவரோ அவரையே திருமணம் செய்வேன் என்றாள். அவளது தந்தை இந்த நாட்டிலேயே உயர்ந்தவர் நம் நாட்டு மன்னர்தான் என்று வாதிட்டார். 

அந்தக்கணமே அப்பெண் மன்னர் மீது காதல் கொண்டு அவர் போகுமிடத்துக்கெல்லாம் அவரைப் பின்தொடர்ந்தாள். மன்னர் ஒருநாள் நகர்வலம் செல்லும்போது தெருவில் வந்த சன்யாசி ஒருவரைக் கண்டு அவர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். இக்காட்சியைக் கண்ட அந்தப் பெண் (அதாவது, நமது கதையின் நாயகி ஆகப்பட்டவள்) ஒரு மன்னரே விழுந்து வணங்கும் குணநலன்கள் குறைவறப்பெற்ற இந்த மஹாபுருஷரே (அதாவது, நமது சன்யாசி) தனது நாயகன் எனக் கருதி, அவரைப் பின் தொடர்ந்தாள். அந்த சன்யாசி தெருவில் நடந்து செல்லும் போது வாய்க்கால் ஓரத்தில் வீற்றிருந்த ஒரு தொந்தி கணபதி விக்ரகத்தைப் பார்த்தார். உடனே பரபர வென்று 10 தோப்புக்கரணம் போட்டார். இக்காட்சியைக் கண்ட அந்தப் பெண் ஒரு மஹா புருஷரே இப்படிப் பதறித் தவித்து தோப்புக்கரணம் போடுகிறார் என்றால், இந்தச் சிலை எவ்வளவு மதிப்புக்குரியது என்று எண்ணி அந்தக் கணபதியே தனது மணாளன் என்று முடிவு செய்தாள் (அதானே இயல்பு!). அவர் அருகில் அமர்ந்து கொண்டு அவரயே வெறித்துப் பார்க்க ஆரம்பித்தாள். அப்போது தெருவில் தேமே என்று சென்று கொண்டிருந்த ஒரு நன்றி உள்ள பிராணி ஒன்று அவர் (கணபதி) மீது அல்பசங்க்யை செய்து விட்டு அதன் போக்கில் சென்றது. இதைக் கண்ணுற்ற அந்த மங்கைநல்லாள் அப் பிராணியின் மீது பெருமதிப்புக் கொண்டாள் (இதுவும் நியாயம்). அந்தப் பிராணியின் மீது கொண்ட தீராக் காதலால் அதையும் அவள் பின் தொடர்ந்தாள். அது சும்மா இருக்காது ஒரு தெருவுக்குள் புகுந்து சும்மா சிவனே என்று கிடந்த ஒரு சிறுவனைப் பார்த்துக் குரைக்க ஆரம்பித்தது. அந்தச் சிறுவன் அதனால் கலவரமாகி, ஒரு கல்லைக் கொண்டு அடித்து நமது பிராணியாரை அலற (ஊளையிட) விட்டான். நமது கதாநாயகி தன் மனதில் வரித்திருந்த நாயவன்/தூயவன்/காதலன் தாக்கப்பட்டது அறிந்து வேதனையுற்றபோதும் தனது முயற்சியில் சற்றும் மனம் தளராமல் தனது பெரிதினும் பெரிது கேள் என்னும் கொள்கைக்கேற்ப அச்சிறுவனைப் பின் தொடர ஆரம்பித்தாள் (எத்தனை இடைஞ்சல்களடா ஓர் உண்மைக் காதலுக்கு!). இதற்கிடையில் நம் பிராணியார் அலறல் காரணமாய் தூக்கம் கலைந்த ஒருவன் அச்சிறுவனை வைதான் (திட்டினான்). காதலன் வேட்டையில் களைத்துப் போனாள் நமது கதாநாயகி. இதற்கு மேலும் பொறுக்க/பொருக்க முடியாது என்று நினைத்த நம் பத்தினித் தெய்வம், ஆஹா சிறுவனை விரட்டும் இவர்தான் எவ்வளவு உயர்ந்தவர் என்று எண்ணி அவரையே தன் இல்லான் ஆக ஆக்கிக்கொள்ள நினைத்தாள். இந்த வீரர்தான் இந்தப் பெண்ணின் தந்தை முதலில் அந்தப் பெண்ணுக்காகப் பார்த்து வைத்தவர். 

கதை நிறைவடைந்தது. இதில் படிப்பினைகள் ஏதுமில்லை, வாழ்க்கை மட்டுமல்ல காதலிகளும் காதலர்களும் ஒரு வட்டமே என்பதைத் தவிர. 

இக்கதை (?!) விண்ணை முட்டும் அளவிற்கு பல சிக்கல்கள் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் நேரத்தில் எழுதியது(!). மூலக்கதை என்னுடையதல்ல. முழுக்கதையும் எனக்கு ஏற்ப்புடையதல்ல.

Tuesday, January 22, 2013

முழிபெயர்ப்பு - அமிதாப்பும் கூகிள் ட்ரான்ஸ்லேட் காமெடிகளும்

நடிகர் அமிதாப்பச்சன் (@SrBachchan) அவர்கள் தமிழில் எதோ சில ட்வீட்டுகள் போட்டு வைத்து இருந்தார். தெரியாத்தனமாக அதைப் படித்துத் தொலைத்து விட்டேன்.

அவரின் தமிழ் ட்வீட்கள் பின்வருமாறு:


  • நம்முடைய விட ஒழுக்கமான தமிழ் சினிமாவில் .. பெரிய ஸ்டூடியோக்கள் சில சென்னை தொழிலாள ஆரம்ப ஆண்டுகள்
  • AR Rehman மூலம் 'kadal' என்ற ... இசை குறிப்பாக ஒரு பாடல் விதிவிலக்கான குறிப்புகள் உள்ளன! அவரை சென்னை திருமண நேரடி விளையாட கேள்வி!
  • தமிழ் சில பெரிய இசை கேட்டு ... அதன் வசீகரிக்கும்! குறிப்புகள் singing முயற்சி ... உண்மையில் கடினமான இருந்தது!
  •  ஹலோ .... எல்லோரும் எப்படி இருக்கும் ... மரியாதையும் அன்பும்

படிச்சுடிங்களா மகாஜனங்களே? நல்லது!

நானும் படிச்சேன். ஆனா என்னனு புரியாம நான் தவித்த தவிப்பை விளக்க சங்க இலக்கியப்பாடல்களால கூட முடியாது. கோணங்கி, ஜெயமோகன், வைரமுத்து, இளையராஜா (?!) எழுத்துகள் மாதிரி அமிதாபும் எழுதறாரேன்னு வியந்து போனேன். என் மரமண்டையில் எதுவுமே ஏறல. நானும் விதவிதமா படிச்சு பாத்தேன். இதுக்கு  என் ப்ரோக்ராமே பெட்டெர்னு நினைச்சு விட்டுட்டேன். அப்புறம் தான் எனக்கு கூகிள் ட்ரான்ஸ்லேட் (Google Translate) செய்து வரும் மகத்தான பணிகள் நினைவுக்கு வந்தன.


இதுல சிக்கினது என்னவோ அமிதாப்தான், ஆனா சின்னாபின்னமானது நமது தாய் மொழியாம் எங்குமுள தென்தமிழ்.

Hello How do you do, Love and Respect-தான் 'ஹலோ .... எல்லோரும் எப்படி இருக்கும் ... மரியாதையும் அன்பும்'-ன்னு முழி பெயர்ப்பு பண்ணிருக்கு நம்ம கூகிள்.  ஹையோ ஹையோ! 


புள்ளியியல் மெஷின் மொழிபெயர்ப்பு அட  அதாங்க Statistical Machine Translation என்கிற நுட்பத்தைப் பயன்படுத்துது நம்ம கூகிள். இதப்பத்தி ஏற்கனவே நான் ரொம்ப அறுத்து தள்ளிட்டேன்.  மறுபடியும்  ஒரு சாம்பிள் பாக்கிறீங்களா? பாருங்க.
எது எப்புடியோ, தமிழனே தமிழ்ல ட்வீட் போட்டா அது ஒரு மானக்கேடு/அவமானம்னு நினைக்கும் போது இவர் தமிழ்ல ட்வீட்டுரது பாராட்டப்படவேண்டிய விஷயம்.



Monday, January 14, 2013

ஹாப்பி பொங்கல்!!!!!!!!!!!


ஒரு டெல்டா விவசாயியின் பொங்கல் வாழ்த்துப்பா:



குறுவை,  சம்பா,  தாளடி  எல்லாம் 
பொய்த்துப் போன நிலையிலும்
நான் கூவுவேன் 'ஹாப்பி  பொங்கல்'.

பொங்கல்  பானையில போடக் கூட 
அரிசி இல்லாத  கொடுமையிலும் 
நான் உரைப்பேன்  'ஹாப்பி பொங்கல்' 

போர்வெல் இருந்தாலும் கரண்ட் இல்லாமல்
கையைப் பிசைந்து நிற்கும் நிலையிலும்
நான் கர்ஜிப்பேன் 'ஹாப்பி  பொங்கல்'.

வாங்கின கடனுக்கு வட்டி கட்ட  
கேரளாவுக்கு தினக்கூலியாப் போகும் போதும் 
ஞான்  பறையும்  'ஹோப்பி பொங்கல்'.

அமைச்சர்கள் குழு வந்து பார்த்திருக்கு
நிவாரணத்தை எதிர்நோக்கி என் காஞ்ச வயல் காத்திருக்கு
ஆகவே நான் செப்புவேன் 'ஹாப்பி பொங்கல்' 

காவிரி ஆறுல வரலைனா என்ன ?
டாஸ்மாக்ல பாருல வருதுடா தண்ணி.
அதனால நான் 'சத்தமாச் சலம்புவேன்'.
'ஹாப்பியோ  ஹாப்பி  பொங்கல் டு ஆல் டமிலன்ஸ்!'



Saturday, January 12, 2013

சுவாமி விவேகானந்தருக்கு இந்த எளியவனின் நமஸ்காரங்கள்.




கொல்கத்தா நகரத்தில் ப்ளேக் நோய் தன்  கோரதாண்டவத்தை ஆடிக்கொண்டிருந்த காலத்தில், ராமகிருஷ்ண மடம் சார்பாக சுவாமி விவேகானந்தர் நோயால் பாதிக்கப்பட்ட  மக்களுக்காகத் தொண்டற்றிவந்தார். அப்போது ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியாமல் சீடர்கள் என்ன செய்வது என்று விவேகானந்த சுவாமிகளிடம் சென்று ஆலோசனை கேட்டனர். அதற்கு விவேகானந்தர் 'மடத்தையும் அதன் சொத்துக்களையும் விற்க வேண்டி வந்தாலும் பரவாயில்லை, எப்படியாவது நிதி திரட்டி வேண்டிய மருந்துப் பொருட்களை வாங்குவோம், இந்த நோயை விரட்டி அடிப்போம், துயர் தீர்ந்த பின் மறுபடியும் மக்களிடம் கை ஏந்திச் சென்று நிதி பெற்று மடத்தைக் கட்டிக் கொள்வோம்' என்று ஆலோசனை வழங்கினார்.  மடத்தை விற்றேனும் மக்கள் துயர் துடைக்க எழுந்த மகான் எங்கே, மடத்தைக் காக்க நீதிமன்றப் படியேறிப் போராடிக்கொண்டிருக்கும் பதர்கள் எங்கே? இன்று அவரது நூற்றைம்பதாவது பிறந்தநாள். சுவாமி விவேகானந்தர் என்கிற பெயரைச் சொன்னாலே கம்பீரம், தைரியம், பொறுமை, வீரம் எல்லாம் பீறிட்டு எழும்.  என்றைக்கும் குன்றாத இளமை வேண்டும் என்று அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியில் சொன்னது சுவாமி விவேகானந்தருக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. அவருக்கு மட்டுமே அது  பொருந்தும்.  எத்தனயோ மகான்கள் இந்த ஞான பூமியிலே, அவர்களில் ஒருவராம்  சுவாமி விவேகானந்தருக்கு இந்த எளியவனின் நமஸ்காரங்கள்.


Tuesday, January 8, 2013

கார்த்திக் ராஜா

விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் வெகு நாட்களுக்குப் பிறகு கார்த்திக் ராஜாவைப் பார்க்க நேர்ந்தது. யுவன் ஷங்கர் ராஜா பாடல்களைக் கேட்டு வளர்ந்த ஜெனரேஷன் ஆசாமிகள் பலருக்கு கார்த்திக் ராஜாவைத் தெரியவில்லை. இவர்  ம்யுசிக் எல்லாம் கம்போஸ் பண்ணுவாரா என்று கேட்டு என்னை கதி கலங்க வைத்தார்கள். கார்த்திக் ராஜாவின் இசையில் 'அலெக்சாண்டர்' திரைப்படம்  வெளிவந்தபோது (1996) அந்தப் படத்தின் 'நதியோரம்' பாடல் மக்களால் வெகுவாக வரவேற்கப்பட்டது. மாரியம்மன் கோவில் திருவிழா மைக்செட், கல்யாண வீடுகள், பிரைவேட் பஸ்கள் எல்லாம் அந்தப் பாடலைப் பலமுறை ஒலிபரப்பி, ஒலிபரப்பி அந்தப்  பாடல் பிரபலம் ஆகியது. இப்போது யார் இவரு என்று கார்த்திக் ராஜாவைக் கேட்பவர்களைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். வெகு நாட்களுக்குப் பிறகு அலெக்ஸாண்டர்  படமும் நதியோரம் பாடலும் நினைவுக்கு வந்தது. அப்போதெல்லாம்  கார்த்திக் ராஜாவுக்கு பெரிய மவுசு இருந்தது.  பின்னர்  அவருக்கு ஏன் பெரிய வெற்றிகள் இல்லை என்பது எனக்கு இன்னமும் புரிய வில்லை.  வெகு நாட்களுக்குப் பிறகு இன்றைக்கு  அந்தப் பாடலை Youtube-ல் கேட்டு இன்புற்றேன். உன்னி கிருஷ்ணன் மற்றும் பவதாரிணி பாடிய பாடல். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.  Link for the Song