Monday, January 18, 2010

ஹரிவராசனம் - வழக்கமும் வரலாறும்!

இந்த ஆண்டு எழுதும் முதல் பதிவு என்பதால் இறைவன் குறித்து எழுதுகிறேன். சென்ற மாதம் சபரிமலை சென்று சாஸ்தாவை தரிசித்து வந்தேன்.

சபரிமலை யாத்திரை என்னை எனக்கே அடையாளம் காட்டியது. ஹிந்து மதம் ஆறு விதமான வழிபாடுகளை கொண்டுள்ளது. காணாபத்தியம், கௌமாரம், சாக்தம், சைவம், வைஷ்ணவம், சௌரம் என்ற ஆறு வழிபாடுகளையும் தாண்டி எழாவது மதம் ஆக இருக்கிறது சாஸ்தா வழிபாடு. எண்ணிலடங்கா ஐயப்பன்மார்கள் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு வந்து ஐயனைத் தரிசிக்கின்றனர்.

அய்யன் சந்நிதானத்தில் சரணகோஷம் விண்ணைப் பிளக்கிறது. பெருவழிப்பாதை என்னும் காட்டுப் பாதையில் பக்தர்கள் வரும்போது, கொடிய மிருகங்கள் ஏதும் தொந்தரவு செய்வதில்லை. கானகமே அதிரும்படியாக சரணம் சொல்லியபடியே பகலிரவு பாராமல் பக்தர் கூட்டம் சன்னதி நோக்கி வந்துகொண்டிருக்கிறது. கடந்து வந்த பாதையின் இடர்கள் அனைத்தும் பதினெட்டு படிகளைக் கண்டவுடன் மறைந்து விடுகிறது.

மாலை நான்கு மணிக்கு நடை திறக்கும் போது சென்று, இரவு பதினோரு மணிக்கு நடை சார்த்தும் வரையில் சந்நிதானத்தில் இருந்தோம். நடை சார்த்தும் போது ஹரிவராசனம், பத்மஸ்ரீ யேசுதாஸ் அவர்களின் குரலில் ஒலிக்கிறது. பரவசத்தில் ஆழ்த்துகிற ஒரு பாடலாக இருக்கிறது ஹரிவராசனம். அந்தப் பாடல் குறித்து மேலும் பல விவரங்களை இப் பதிவில் சொல்ல விழைகிறேன்.

ஹரிவராசனம் கும்பக்குடி குளத்தூர் ஐயர் என்பவரால் 1950 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. மொத்தம் பதினாறு பதங்களைக் கொண்ட இப்பாடலில், முதல் ஏழு பதங்கள் மட்டுமே சபரிமலையில் பாடப்படுகின்றது. சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டு, மத்யமாவதி ராகத்தில் பாடப்படுகிற இப்பாடல் குறித்து இரு வேறு வரலாறுகள் கேள்விப்பட்டேன். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு மேல் சாந்தி திருமேனி ஈஸ்வரன் நம்பூதிரியின் நண்பர் கோபால மேனன் என்பவர்தான் இப்பாடலை ஆத்மார்த்தமாக பாடுவார். கோபால மேனன் அங்கேயே தங்கி இருந்தார். தேவசம் போர்டு உருவானபிறகு அவர் சந்நிதானத்தில் இருந்து அனுப்பப்பட்டார்.

பிறகு ஒருநாள் கவனிப்பார் இன்றி வண்டிப்பெரியாரில் உள்ள ஒரு தனியார் இடத்தில அனாதையாக இறந்து போனார். அவரது மறைவைக் கேள்விப்பட்ட அன்று மேல் சாந்தி சன்னதியை நடை சார்த்தும் போது அவரது நினைவாக இந்தப் பாடலைப் பாட ஆரம்பித்தார். அது என்றும் தொடர்கிறது என்று சிலர் கூறுகின்றனர்.

இன்னொரு சரார்களின் கூற்றின்படி, இப் பாடலைப் பாடும் வழக்கம், சந்நிதானத்தைப் புதிதாகப் பிரதிஷ்டை செய்த போது ஏற்பட்டது. 1955 - நடந்த ஒரு பெரும் தீ விபத்தில் சன்னிதானம் முற்றிலும் சேதமடைந்ததை தொடர்ந்து, சுவாமி விமோச்சனானந்தா தென்னகம் எங்கும் சுற்றுப்பயணம் செய்து ஐயப்ப பக்தியைத் தழைக்கச் செய்தார். அவர் மூலமாகவே இப்பாடல் சுவாமிக்கு இரவு நேரத் தாலாட்டாக பாடப்படுகிறது. ஒவ்வொரு பதம் பாடி முடியும் போதும் ஒவ்வொரு கீழ் சாந்தியும் ஒன்றன் பின் ஒன்றாக சன்னதியை விட்டு வெளியில் வருவர். பாடல் முடிவடைந்தபின், மேல் சாந்தி, ஸ்ரீகோவிலில் உள்ள தீபங்களை ஒவொன்றாக சாந்தி செய்து விட்டு வெளிவந்து நடை சார்த்துவார்.

சைவ வைஷ்ணவ பேதம் இன்றி பாடப்படும் இப்பாடல், கேட்பார் நெஞ்சை கரைக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

2 comments:

Muruganantham Durairaj said...

அருமை.

Anonymous said...

Another good piece of writing from Kulithalai Ramakrishnan!