கேரளாவுக்கு தினக்கூலியாப் போகும் போதும்
ஞான் பறையும் 'ஹோப்பி பொங்கல்'.
திரையுலகில் கமல் தன் தடம் பதித்து ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. பால் முகம் மாறாப் பாலகனாய் கமல் களத்தூர் கண்ணம்மாவில் துவங்கி, உன்னைப்போல் ஒருவன் வரை நீண்டுகொண்டிருக்கும் கமலின் திரைப்பயணம் அசாதாரணமானது. குழந்தை நட்சத்திரமாக துவங்கி, நடன இயக்குனராக, திரைக்கதை ஆசிரியராக, பாடகராக, கதநாயகனாக, இயக்குனராக பல்வேறு பரிணாமங்களைக் கொண்டுள்ள கமலை தமிழ் சினிமா மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது. பரிட்சார்த்த முயற்சிகளும், கடும் உழைப்பும் கமலை பிற நடிகர்களிடமிருந்து தனித்து அடையாளம் காட்டுகின்றன.
நான் பிறந்ததில் இருந்து கமல் அப்படியே இருக்கிறார். நான்தான் முதுமை அடைந்துவிட்டேன். கமல் என்ன படித்தார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் படிக்காதது எதுவுமில்லை என்பது மட்டும் அனைவருக்கும் தெரியும். பிற நடிகர்களை உலகுக்கு தமிழ் சினிமா அடையாளம் காட்டியது. ஆனால் கமல் மட்டுமே தமிழ் சினிமாவை உலகுக்கு அடையாளம் காட்டியவர். பல்வேறு முறை தோல்விகள் கண்ட போதும் கமல் தன் முயற்சிகளை கைவிட்டதில்லை. அம்மா அடித்து அழும் குழந்தைகள், அம்மாவையே கட்டிக் கொண்டு அழுவது போல, மீண்டும் மீண்டும் கமல் சிறந்த உழைப்பைக் கொடுத்தார். கொடுத்துக்கொண்டும் இருப்பார். ரசிகர்கள் விவரம் தெரியாதவர்கள், உங்கள் முயற்சிகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் என்று பலர் சொன்ன போதும், அதை கமல் மட்டுமே ஆணித்தரமாக மறுத்தார். தாகம் தீராக் கலைஞன் கமல். ஒரு வாழும் வரலாறாக இருந்த போதும், இத்தனை விருதுகளுக்குப் பிறகும், நான் செய்தது ஒன்றும் இல்லை, இன்னும் பல வேலைகள் உள்ளன என்று பணிவு காட்டியது கமல் மட்டுமே. ஒரு ரசிகனாய், சக மனிதனாய் அவரைப் பாராட்டுவது தவிர, வேற என்ன செய்ய முடியும் இந்த பாமர ரசிகனால்.
பிறந்தநாள் வாழ்த்துகள்...வாழ்க நீர் பல்லாண்டு.