Wednesday, June 17, 2009

பெருமாள் கோவிலும் சிறுவர் குழாமும்!

பெருமாள் கோவில் உத்சவத்தில் கலந்துகொண்டு முதல் மரியாதையை பெறச் சென்றிருந்தேன். தீபாராதனைக்கு முன்னர் திரை சார்த்தி இருந்தது. அனைவரும் பயபக்தியோடு தீபாராதனைக்கு காத்திருந்தனர். திரைக்கு முன்னால் ஒரு சிறுவர் குழாம் நின்று கொண்டு இருந்தது ( நான்கு அல்லது ஐந்து சிறுவர்கள்). சிறுவர்கள் குழாம் ஏற்படுத்திய சத்தத்தில் பலரது கவனம் கலைந்தது. சிறுவர்கள் அனைவரும் ஒரு விதமான மகிழ்சியில் இருந்தனர். ஒரு பையனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. எதயோ நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டு இருந்தான். அவனது சிரிப்பு வயது வித்யாசமின்றி அனைவரயும் ஒரு நோய் போலத் தொற்றிக்கொண்டு இருந்தது. பலர் சிரிப்பை மறைக்க முயற்சி செய்து கொண்டு இருந்தனர். சிலர் சிரிப்பது ஒரு குற்றம் போல சிரிப்பை அடக்கி முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு இருந்தனர். உள்ளே இருந்த ஸ்ரீ வைஷ்ணவர்க்கும் சிரிப்பு வந்துவிட்டது. பெருமாளுக்கும் சிரிப்பு வந்திருக்கலாம். திரையிட்டு இருந்ததால் பார்க்க முடியவில்லை, எனக்கு ஞானக்கண்ணும் இல்லை.

நம்மில் பெரும்பாலோர்க்கு கடவுள் தண்டனை தரும் காவலனாகவோ, நாம் தேவைகளை நிறைவேற்றவந்த தேவதூதன் போலோ தோற்றமளிக்கிறார். குழந்தைகளால் மட்டுமே கடவுளோடு பேசவும் நட்பு பாராட்டவும் முடிகிறது. ஒரு இறுக்கமான சுழலைக்கூட எளியதாக, இயல்பான ஒன்றாக மாற்றும் திறன் குழந்தைகளுக்கே உரியது என்பதும், மனிதன் வளர வளர தான் கொண்டு வந்த நகைச்சுவை உணர்வையும் தனக்குள்ளே இருக்கும் குழந்தைதனத்தையும் தொலைத்து விடுகிறான் என்பது தெரிய வந்தது. வீட்டிற்கு வந்த பின்னும், தொடர்ந்து அந்த நிகழ்வு என்னை துரத்திக்கொண்டு இருந்தது.

எப்பொழுதோ பார்த்த "வித்யார்த்திகளே, இதிலே இதிலே" என்ற மலையாளத் திரைப்படம் நினைவுக்கு வந்தது. அப்படத்தில் ஒரு காட்சியில் பல்வேறு மதங்களைச் சார்ந்த சிறுவர்கள் விளையாடும் போது பந்து சுவரில் உள்ள ஓர் விநாயகர் சிலையை உடைத்து விடும். சிறுவர்கள் கூடிப்பேசி தாம் ஒவ்வொருவரும் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுத்து ஓர் புதிய சிலையை அங்கே வைத்து விடுவர். மறுபடியும் ஒரு முறை பந்து சிலையை உடைத்து விட, மறுபடியும் சிறுவர்கள் தங்கள் பணத்தைகொண்டு புதிய சிலை வாங்குவர். வோர்ட்ஸ்வொர்த் சொன்ன "Child is the father of the Man" வரி நூறு சதவீதம் உண்மை என்று புலனாகியது. இதே நிகழ்வு பெரியவர்கள் மத்தியில் நடந்திருந்தால் குறைந்தது ஒரு சிறிய கலவரமாவது நிகழ்ந்திருக்கும். சிறுவர்களின் உலகம் அன்பாலும் நட்பாலும் நிறைந்திருக்கிறது. அதை வளர்த்தெடுக்கவேண்டிய மனிதன், மாறாக அவன் மனதில் வன்மம் வளரச் செய்கிறான். “நான் ஒரு எறும்பைக் கொல்கிறேன், என் பிள்ளைகள் அதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்ற கவிதை நினைவுக்கு வந்தது.

பெருநகரங்களில் வாழும் சிறுவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. விடுமுறை நாட்களில் கூட அவர்களால் அவர்களின் விருப்பத்திற்கேற்ப இயங்க முடிவதில்லை. “ஊருக்கு போகலியா திருவிழாவுக்கு, தாத்தா பாட்டி எல்லாம் போயி பார்க்கலியா?” என்று கேட்டதற்கு ஒரு பையன் "அபாகஸ் கிளாஸ் போகணும் அங்கிள்" என்று சொன்னான். என் நண்பர் ஒருவரின் மகன் வெவ்வேறு நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களும், அந்நாடுகளின் நாணயங்களையும், வான் மற்றும் கப்பல் வழிகளையும் நொடியில் சொல்லிவிடுவான். ஆனால் பக்கத்து வீட்டில் இருக்கும் நண்பனின் பெயரை யோசித்தே சொல்ல முடிக்கிறது அவனால். யாரோ எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வந்தது அவனைப் பார்க்கும் போது, "குழந்தை அறிவுஜீவியைபோல் பேசுகிறான் என்று மகிழ்ச்சியடைகிறாள் மனைவி, குழந்தை குழந்தையாக இல்லயே என்று கவலை கொள்கிறான் கணவன்".

கல்வி பெரிதும் வணிகமாகியுள்ள சூழலில் மாற்றுகல்வி முறைகளும் பயிற்றுவித்தல்களும் அதிகம் முக்கியத்துவம் பெறுகின்றன. திறமைகளை நிரம்ப வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் தான் என்ற போதும், வெறும் கணக்குகளும், பயிற்சிகளும் தாண்டி, வாழ்வையும் மனிதர்களையும் அவர்களின் இயல்பையும் புரிந்து கொள்ள அவர்களை தயார்படுத்த வேண்டும்.

ஒரு புறம் நகரத்து சிறார்களின் வாழ்கை இவ்வாறு உள்ள நிலையில், பள்ளிக்கல்வி என்பதே எட்டாக்கனியாய் இருக்கிறது சில சிறார்களுக்கு. உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில், முதியோர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்கையில், இந்தியாவில் மட்டுமே இளைஞர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டிருக்கிறது. ஆனால், மொத்த தேசிய வருமானத்தில் 3.5 சதவீதம் மட்டுமே இந்தியா கல்விக்காக செலவிடுகிறது. (சீனா மொத்தம் 8 சதவிகிதம்). அரசு நடத்தும் ஓரு மில்லியன் பள்ளிகளில், பெரும்பாலானவை தரம் குறைந்தவையாக இருக்கின்றன. மாணவர் சேர்க்கையும் நாளுக்கு நாள் குறைகிறது. தனியார் பள்ளிகள் வணிகமயமாக்கப்பட்ட சுழலில், கல்வி ஓர் சாமானியனுக்கு அரிதாகவே ஆகிவிடுகிறது. சீருடை, புத்தகம், பள்ளி வாகனம், காலணிகள் என அனைத்தும் தாங்களே தரும் இப்பள்ளிகள், கல்வியை மட்டும் "அதெல்லாம் நாங்க சொல்லிதர மாட்டோம், வெளியில் தனியா டியூஷன் ஏற்பாடு பண்ணிக்கங்க" என்று சொல்லுவது விசித்தரமாக இருக்கிறது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றைத் தயாரிக்க ஆகும் செலவில், மூன்று லட்சம் ஆரம்ப பள்ளிகளை கட்ட முடியும் என்று சொல்கிறது ஓரு புள்ளி விவரம். மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் , பள்ளியை விட்டு விலகுவோரின் எண்ணிக்கையை குறைக்கவும் அரசாங்கம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் போதிலும், பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை. "குட்டி" திரைப்படம் ஏற்படுத்திய வலி இன்னமும் இருக்கிறது. இசைஞானியின் குரலில், "எங்கே போறே தங்கச்சி" பாடலைக் கேட்கும் போதெல்லாம் இனம் புரியாத வேதனை ஆட்கொள்கிறது. சுஜாதாவின் கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. அவர் சொல்லியுள்ள வரிகளோடு, "உன் நிலை குறித்து வலைப்பதிவு ஒன்றும் எழுதுவோம்" என்று சேர்த்துக்கொள்ளுங்கள்.


3 comments:

Unknown said...

Excellant observation and brought forth all your heartfelt feelings in the blog. Hat off to you. This blog should be published in one of the chitridhal. Keep writing and anothe s. ramakrishnan in the making and new arrival of writer to the tamil literature.

Ashok Krishnamoorthy said...

I don't have comments for this blog..

I am proud to be a student of a true teacher... :-)

Prasanna said...

Excellent draft of your opinion .. i did not believe thats yours!!! It looks as if it is written by well experienced writter. Yes it could be published in any magazines. Keep it up balu .. great to see in blogs..
Glad to be your friend and proud to be also