Monday, November 30, 2009

காய்ச்சலும் கவலையும்...


இந்த மழை சிலருக்கு கவிதைகளையும் சிலருக்கு காய்ச்சலையும், எனக்கு இரண்டையும் தந்திருக்கிறது. உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே இருந்தேன். மருந்துகள், தூக்கம், சோர்வு என்று நேரம் கடந்து கொண்டிருந்தது. என் தந்தை பயன்படுத்திய சாய்வு நாற்காலியில் பெரும்பாலும் படுத்துக்கிடந்தேன். நோய் கண்டவனின் பகல் பொழுதுகள் சஹாராவை விட நீளமாக இருக்கின்றன. காய்ச்சல் காரணமாக சிறுவயதில் ராணி காமிக்ஸ் புத்தகத்தில் படித்த கதை மாந்தர்களெல்லாம் இரவில் கனவில் வந்து இம்சை செய்தனர். இரவும் அல்லா பகலும் அல்லா ஒரு ஹிரண்யநேரத்தில் மருத்துவமனைக்கு சென்று வந்ததைப் பற்றி யோசித்தவண்ணம் இருந்தேன்.

பள்ளி நாட்களில் இருந்து இன்று வரை பலமுறை மருத்துவமனைக்கு சென்றிருக்கிறேன்.ஒவ்வொரு முறையும் அது தனித்த அனுபவமாகவே இருக்கிறது. சிறுவயதில் இருந்து பார்த்த அதே டாக்டர் சிரித்த முகத்துடன் அமர்ந்திருந்தார். காத்திருந்த நேரத்தில் சுற்றி இருந்த அனைவரையும் உற்று நோக்கியவண்ணமிருந்தேன். அற்புதமான முக வாசிப்புகள் ரயில் நிலையங்களிலும் மருத்துவமனைகளிலும் தான் சாத்தியமாகின்றது. மருத்துவமனைகள் வயது வித்தியாசமின்றி எல்லோரையும் குழந்தைகள் போல் மாற்றிவிடுகின்றன. எல்லோருக்கும் உடல் நிலை சரியில்லாத போது சாய்ந்துகொள்ள ஒரு தோளும், ஆறுதலுக்கு ஒரு சொல்லும் தேவைப்படுகின்றது. எல்லா மருத்துவமனைகளிலும் இருக்கும் குழந்தை படம், அமைதியாயிருக்கும் படி சொன்னது.

சிறு வயதில் சேற்றில் கிரிக்கெட் விளையாடி, கை கால்கள் எல்லாம் புண்கள் வந்து அவஸ்தைப்பட்டேன். இப்பொது இருக்கும் டாக்டர், அவரது தந்தை (அவரும் டாக்டர்) , மற்றும் என் தந்தை எல்லோரும் சேர்ந்து மயக்கமருந்து இன்றி எனக்கு ஒரு அறுவை சிகிச்சைக்கு நிகரான ஒரு நிவாரணம் செய்து அலறவைத்தனர். சிறுவயதில் அந்த அறைக்குள் செல்ல மறுத்து அடம் பிடித்தது நினைவுக்கு வந்து, என்னை நானே மவுனமாக பகடி செய்து கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு சிறுவனை அங்கே அவன் தந்தை அழைத்து வந்தார். அவன் ஊசி போட வேண்டாம் என்று எதற்கோ பலமாக அழத்துவங்கினான். அவன் தந்தை அவனை சமாதானப்படுத்தி விட்டு புதிய ஊசி வாங்க மருந்தகம் சென்றார். அவன் மெல்ல என் அருகில் வந்து ஊசி வேண்டாம் என்று சொல்லுங்கள் அண்ணா என்றான். சரி என்று ஆமோதித்தேன். உடனே என் கையை இறுக்கிப் பிடித்தபடி, அவன் உட்கார்ந்து கொண்டான். நடுங்கிக்கொண்டிருக்கும் அவன் கைகளின் வெம்மை என் கைகளுக்குள் பரவ ஆரம்பித்தது. எனக்கும் அவனுக்கும் வயது குறைந்துகொண்டிருந்தது. பேச்சற்ற மௌனத்தில் இருவரும் அமர்ந்திருந்தோம். சொற்கள் ஏதும் அற்ற ஒரு தவிப்பை அவன் உணர்ந்திருந்தான். அவன் தந்தை வந்து மறுபடியும் அழைக்கலானார். அவன் ஊசி வேண்டாம்பா என்று மறுபடியும் அழ ஆரம்பித்தான். வயது வேறுபாடின்றி, மருத்துவமனைகள் எல்லோரையும் எதோ பயம் கொள்ளச் செய்கின்றன. ஏன் அங்கே காத்திருப்பது ஒரு சுவாரசியமான அனுபவமாக எவருக்கும் இருப்பதில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். என் தவிப்பு எனக்கே விசித்திரமாகவும் நகைப்புக்குரியதாயும் இருந்தது. நான் எதையோ நினைத்து சிரிக்க ஆரம்பித்தேன். அருகில் இருந்த ஒருவன் எனக்கு காய்ச்சல் முற்றிவிட்டிருக்குமோ என்று பயந்து சற்று தள்ளி உட்கார்ந்தான். நான் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தேன்.

5 comments:

kamalakkannan said...

நாங்கல்லாம் சுயமா வைத்தியம் சென்சிக்குவோம் இது என்ன சின்ன்னபுலதனாமா டாக்டர் கிட்ட போறது .

VIJI said...

I like so much of Sujatha’s writings. I feel the same in your words.
Also it’s helped to recollect my sick days.
The Rani comics is really excellent. I remember the "Rani Comics" after a long time.
The word "முக வாசிப்புகள்" is …. Ayyo..! Neenga periya writer aaga poreengannu mattum nalla theriyuthu.!
I am expecting more like this.

Unknown said...

Fine. Malarum ninavukal &
annubhavam pesu-girathru.

Unknown said...

You are another ramakrishnan in the making. Kindly send your blogs to some of the chitridhals. Definitely it will be published

Buvana Vellaisamy said...

Hai sir,
Your writing's are superb.. But one doubt.. What happened to that small boy? Did u saved him from his father?