Wednesday, January 30, 2013

வாழ்க்கை ஒரு வட்டமே!

ஒரு ஊரில் ஒரு அழகான/சுமாரான ஒரு பெண் இருந்தாள். அவளுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பிய அவளது பெற்றோர், ஒரு நல்ல மனிதனை/ இளைஞனை அவளுக்கு திருமணம் செய்துவைக்க நினைத்தனர். தன் அழகின் மீதுள்ள கர்வத்தால் அவள் அவனை நிராகரித்தாள் (அவன் அழகாய், வலிவாய் இருந்த போதும்). 

அந்தப் பெண்ணின் தந்தை அவளிடம் உனக்கு தகுதியான மாப்பிள்ளை யார் என்று கேட்டதற்கு, அந்தப் பெண் இந்த நாட்டிலேயே மிக உயர்ந்தவர் யவரோ அவரையே திருமணம் செய்வேன் என்றாள். அவளது தந்தை இந்த நாட்டிலேயே உயர்ந்தவர் நம் நாட்டு மன்னர்தான் என்று வாதிட்டார். 

அந்தக்கணமே அப்பெண் மன்னர் மீது காதல் கொண்டு அவர் போகுமிடத்துக்கெல்லாம் அவரைப் பின்தொடர்ந்தாள். மன்னர் ஒருநாள் நகர்வலம் செல்லும்போது தெருவில் வந்த சன்யாசி ஒருவரைக் கண்டு அவர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். இக்காட்சியைக் கண்ட அந்தப் பெண் (அதாவது, நமது கதையின் நாயகி ஆகப்பட்டவள்) ஒரு மன்னரே விழுந்து வணங்கும் குணநலன்கள் குறைவறப்பெற்ற இந்த மஹாபுருஷரே (அதாவது, நமது சன்யாசி) தனது நாயகன் எனக் கருதி, அவரைப் பின் தொடர்ந்தாள். அந்த சன்யாசி தெருவில் நடந்து செல்லும் போது வாய்க்கால் ஓரத்தில் வீற்றிருந்த ஒரு தொந்தி கணபதி விக்ரகத்தைப் பார்த்தார். உடனே பரபர வென்று 10 தோப்புக்கரணம் போட்டார். இக்காட்சியைக் கண்ட அந்தப் பெண் ஒரு மஹா புருஷரே இப்படிப் பதறித் தவித்து தோப்புக்கரணம் போடுகிறார் என்றால், இந்தச் சிலை எவ்வளவு மதிப்புக்குரியது என்று எண்ணி அந்தக் கணபதியே தனது மணாளன் என்று முடிவு செய்தாள் (அதானே இயல்பு!). அவர் அருகில் அமர்ந்து கொண்டு அவரயே வெறித்துப் பார்க்க ஆரம்பித்தாள். அப்போது தெருவில் தேமே என்று சென்று கொண்டிருந்த ஒரு நன்றி உள்ள பிராணி ஒன்று அவர் (கணபதி) மீது அல்பசங்க்யை செய்து விட்டு அதன் போக்கில் சென்றது. இதைக் கண்ணுற்ற அந்த மங்கைநல்லாள் அப் பிராணியின் மீது பெருமதிப்புக் கொண்டாள் (இதுவும் நியாயம்). அந்தப் பிராணியின் மீது கொண்ட தீராக் காதலால் அதையும் அவள் பின் தொடர்ந்தாள். அது சும்மா இருக்காது ஒரு தெருவுக்குள் புகுந்து சும்மா சிவனே என்று கிடந்த ஒரு சிறுவனைப் பார்த்துக் குரைக்க ஆரம்பித்தது. அந்தச் சிறுவன் அதனால் கலவரமாகி, ஒரு கல்லைக் கொண்டு அடித்து நமது பிராணியாரை அலற (ஊளையிட) விட்டான். நமது கதாநாயகி தன் மனதில் வரித்திருந்த நாயவன்/தூயவன்/காதலன் தாக்கப்பட்டது அறிந்து வேதனையுற்றபோதும் தனது முயற்சியில் சற்றும் மனம் தளராமல் தனது பெரிதினும் பெரிது கேள் என்னும் கொள்கைக்கேற்ப அச்சிறுவனைப் பின் தொடர ஆரம்பித்தாள் (எத்தனை இடைஞ்சல்களடா ஓர் உண்மைக் காதலுக்கு!). இதற்கிடையில் நம் பிராணியார் அலறல் காரணமாய் தூக்கம் கலைந்த ஒருவன் அச்சிறுவனை வைதான் (திட்டினான்). காதலன் வேட்டையில் களைத்துப் போனாள் நமது கதாநாயகி. இதற்கு மேலும் பொறுக்க/பொருக்க முடியாது என்று நினைத்த நம் பத்தினித் தெய்வம், ஆஹா சிறுவனை விரட்டும் இவர்தான் எவ்வளவு உயர்ந்தவர் என்று எண்ணி அவரையே தன் இல்லான் ஆக ஆக்கிக்கொள்ள நினைத்தாள். இந்த வீரர்தான் இந்தப் பெண்ணின் தந்தை முதலில் அந்தப் பெண்ணுக்காகப் பார்த்து வைத்தவர். 

கதை நிறைவடைந்தது. இதில் படிப்பினைகள் ஏதுமில்லை, வாழ்க்கை மட்டுமல்ல காதலிகளும் காதலர்களும் ஒரு வட்டமே என்பதைத் தவிர. 

இக்கதை (?!) விண்ணை முட்டும் அளவிற்கு பல சிக்கல்கள் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் நேரத்தில் எழுதியது(!). மூலக்கதை என்னுடையதல்ல. முழுக்கதையும் எனக்கு ஏற்ப்புடையதல்ல.

1 comment:

தமிழ் said...

sir,
நீங்களும் வட்டத்தை மையப்படுத்தி கதை எழுதியமைக்கு பாராட்டுகள்.

நானும் வட்டத்தை வைத்துதான் எழுதினேன்.

எளிமையான கதைதான். கேள்விப்பட்ட கதைதான். கொஞ்சம் வித்தியாசமாக எழுதியிருக்கிறீர்கள்.

கடைசி 2 பாராக்கள்தான் Highlight!